தமிழ்நாடு மாணவர்கள் உலகமெங்கும் சென்று சாதிக்க வேண்டும்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
|தீரன் சின்னமலை மகளிர் கல்லூரியில் புதிய கட்டிடத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தார்.
சென்னை,
திருப்பூர் வஞ்சிப்பாளையத்தில் உள்ள தீரன் சின்னமலை மகளிர் கலை கல்லூரியில் கட்டப்பட்ட புதிய கட்டிடத்தை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வாயிலாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
அதன்பின்னர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
தீரன் சின்னமலை பெயரை கல்லூரிக்கு வைத்ததற்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். தீரன் சின்னமலையின் பெயரை சொன்னால் தற்போதும் எழுச்சி ஏற்படும். தீரன் சின்னமலை பெயரில் மகளிர் கல்லூரியும் தொடங்கப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் மேற்கு மண்டலத்தில் 9 அமைச்சர்கள் இருந்தும் கல்லூரி கட்ட நிலம் ஒதுக்கவில்லை. கல்லூரி கட்டுவதற்கான தடையை திமுக அரசு நீக்கியது. திமுக ஆட்சியில்தான் இந்த பகுதிக்கு 2 மகளிர் கல்லூரிகள் வந்துள்ளன.
கொங்கு வேளாளர் சமுதாயத்தை பிற்படுத்தப்பட்ட சமுதாயமாக அறிவித்தவர் கருணாநிதி. தமிழ்நாடு மாணவர்கள் உலகமெங்கும் சென்று சாதிக்க வேண்டும் என்பதுதான் எனது விருப்பம். நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டாமென மருத்துவர்கள் அறிவுறுத்தியதால் நேரில் வர இயலவில்லை; காணொலி மூலம் கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.