< Back
மாநில செய்திகள்
10 ஆண்டில் தமிழ்நாட்டில் தமிழ் பேசுபவர்கள் எண்ணிக்கை சிறுபான்மையாக இருக்கும் - பாஜக தலைவர் எச்.ராஜா
மாநில செய்திகள்

10 ஆண்டில் தமிழ்நாட்டில் தமிழ் பேசுபவர்கள் எண்ணிக்கை சிறுபான்மையாக இருக்கும் - பாஜக தலைவர் எச்.ராஜா

தினத்தந்தி
|
4 March 2023 3:06 PM IST

10 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் தமிழ் பேசுவர்களின் எண்ணிக்கை சிறுபான்மையாக இருக்கும் என்று பாஜக தலைவர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழ்நாட்டில் வட மாநிலத்தவர்களின் ஆதிக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அனைத்து துறைகளிலும் வட மாநிலத்தவர்களின் ஆதிக்கம் அதிகரித்து வருவதால் தமிழ்நாட்டில் தமிழர்களின் வேலைவாய்ப்பு, வாழ்வாதாரம் உள்பட பல்வேறு விவகாரங்கள் கேள்விக்குறியாகி வருகிறது.

இதனிடையே, கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் உள்ள வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு வருகின்றனர். குறிப்பாக, வரும் 8-ம் தேதி வட இந்தியாவில் ஹோலி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதை கொண்டாட தமிழ்நாட்டில் வேலை செய்து வரும் வட இந்திய தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு வருகின்றனர். ஆனால், தமிழ்நாட்டில் வட இந்திய தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக சமூகவலைதளங்களில் போலி செய்தி பரவியதால் இந்த விவகாரம் பூதாகரமானது. குறிப்பாக வட இந்திய ஊடகங்களில் இது தொடர்பாக போலி செய்திகள் பரவின. ஒருசில இந்தி நாளிதழ்களில் தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாகவும் செய்தி வெளியாகின.

இதையடுத்து, தமிழ்நாட்டில் உள்ள வடமாநில தொழிலாளர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் இருந்து வட மாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்வது குறித்து பாஜக மூத்த தலைவர் எச்.ராஜாவிடம் இன்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த பாஜக தலைவர் எச். ராஜா கூறுகையில்,

தமிழ்நாடு அமைதி பூங்கா என்பது பொய் பித்தலாட்டம். ஏனென்றால் 19 ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணி அமைப்பினர் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு ஒரு படுகொலை நடைபெறுகிறது. தினம் தோறும் தமிழ்நாட்டில் போதைபொருட்கள், கஞ்சா பிடிபடுவது அதிகரித்துள்ளது.

தேச விரோத செயல்களுக்கான புகழிடமாக தமிழ்நாடு உள்ளது. இதனால் தமிழ்நாட்டை அமைதி பூங்கா என்று கூறுவதில் அர்த்தமில்லை. 1964-65ல் நடைபெற்றது போன்று நடைபெறும் என நம்பி மக்களிடம் எடுபடும் என்று செய்துவிட்டு இப்போது தொழிலாளர்துறை மந்திரி எல்லா தொழிலாளர்களுக்கும் பாதுகாப்பு கொடுக்கிறோம் என்று கூறுகிறார்.

இந்த விவகாரத்தில் வடக்கனுக்கு பாதுகாப்பு கொடுக்க மாட்டேன் என்று பேசுங்கள் பார்க்கலாம். 1964-ல் பேசினீர்கள் தானே.

நம் வேலையை நாம் பார்க்க தமிழன் தயாராக இல்லையென்றால் நான் இப்போது சொல்கிறேன் குறித்துக்கொள்ளுங்கள் 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் தமிழ் பேசுபவர்கள் எண்ணிக்கை சிறுபான்மையாக இருக்கும். ஏனென்றால் தமிழர்கள் சட்டையை மடித்துவிட்டுக்கொண்டு கட்டிங்கிற்கு காசு கிடைத்தால் சரி என்று போகக்கூடிய சூழ்நிலையை இந்த திராவிட இயக்கங்கள் இளைஞர்களை கெடுத்துள்ளது. இளைஞர்களை இதுபோன்று மாற்றியது யார்?

1969-ல் ஒரு தலைமுறைக்கு குடி என்றால் தெரியாது. ஆனால், 1969 ஆகஸ்ட் 31-ல் தமிழ்நாட்டில் கல்லுக்கடையை திறந்துவிட்டு ஒவ்வொரு தமிழனையும் குடிக்கவைத்து குடிகாரனாக்கிய மிகவும் மோசமான நபர் கருணாநிதி.

அந்த கருணாநிதியின் மகன் தானே ஸ்டாலின். உங்கள் ஆட்சி மோசமான ஆட்சி. இன்றைக்கு உங்கள் பித்தலாட்டங்கள் இங்கு எடுபடாது. இங்கு உள்ள வடமாநில தொழிலாளர்கள் அவர்களாக வரவில்லை. நமது தொழிலதிபர்கள் இங்கிருந்து அங்கே சென்று வடமாநில தொழிலாளர்களுக்கு ரெயிலில் பெட்டி பெட்டியாக டிக்கெட் பதிவு செய்து ஏற்றி கூட்டிக்கொண்டு வருகின்றனர். வடமாநில தொழிலாளர்கள் அவர்களாக வரவில்லை. இதை பிரச்சினையாக்க வேண்டுமென்று சீமான் போன்று நினைத்தால் அது திருப்பி தாக்கும். இது எல்லாம் வடமாநில தொழிலாளர்களை தமிழ்நாட்டில் வேலைக்கு வைத்து பாஜக அவர்களின் வாக்கை சேகரிப்பதற்காக அழைத்து வருவதாக நினைப்பவர்கள் முட்டாள்கள்' என்றார்.



மேலும் செய்திகள்