< Back
மாநில செய்திகள்
அனைத்து மாநிலங்களுக்கும் தமிழை எடுத்து செல்ல வேண்டும் - கவர்னர் ஆர்.என்.ரவி
மாநில செய்திகள்

அனைத்து மாநிலங்களுக்கும் தமிழை எடுத்து செல்ல வேண்டும் - கவர்னர் ஆர்.என்.ரவி

தினத்தந்தி
|
3 Sept 2024 1:04 PM IST

கண்டிப்பாக ஒருநாள் சரளமாக தமிழ் பேசுவேன் என்று கவர்னர் ஆர்.என்.ரவி கூறினார்.

சென்னை,

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி சென்னையில் ஒரு பள்ளிக்கூட நூற்றாண்டு விழாவில் பேசியபோது மாநில பாடத்திட்டம் குறித்து ஒரு கருத்தை வெளியிட்டு இருந்தார். அதில் தேசிய பாடத்திட்டத்தை ஒப்பிடும்போது மாநில பாடத்திட்டம் தரம் குறைந்ததாக இருக்கிறது.

இது போட்டித்தேர்வுகளுக்கு ஏற்றதல்ல என்றும் மாநில பாடத்திட்டத்தில் புதிய தொழில்நுட்பங்கள் குறித்து இடம்பெற வேண்டும் என்றும் தெரிவித்து இருந்தார். கவர்னரின் இந்த கருத்து அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், சென்னை அரும்பாக்கத்தில் தேசிய கருத்தரங்கு மற்றும் பரிசளிப்பு விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி பேசுகையில்,

"செப்பு மொழி பதினெட்டுடையாள் எனிற் சிந்தனை ஒன்றுடையாள்' என்ற சிறப்பு பெற்ற மொழிதான் தமிழ். அனைத்து மாநிலங்களுக்கும் தமிழ் மொழியை எடுத்து செல்ல வேண்டும். தமிழ் பத்திரிகைகளை வாசிக்கிறேன். யாராவது தமிழில் பேசினால் புரிந்து கொள்கிறேன்.

தமிழ் மிகவும் பழமையான, அழகான மொழி; சக்திவாய்ந்த மொழி; மற்றவர்களைப் போல தமிழை சரளமாக பேச வேண்டும் என்பது எனது விருப்பம்; நான் தமிழை கற்றுக் கொண்டு வருகிறேன்; கண்டிப்பாக ஒருநாள் சரளமாக தமிழ் பேசுவேன். என்னைப் போலவே பிரதமர் நரேந்திர மோடியும் தமிழ்மொழியை கற்றுக் கொண்டு வருகிறார்". இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்