< Back
மாநில செய்திகள்
தமிழ்நாடு முழுவதும் உள்ள தாய்த்தமிழ் உறவுகள் சென்னை மக்களுக்கு உதவிட வேண்டும் - சீமான் வேண்டுகோள்
மாநில செய்திகள்

தமிழ்நாடு முழுவதும் உள்ள தாய்த்தமிழ் உறவுகள் சென்னை மக்களுக்கு உதவிட வேண்டும் - சீமான் வேண்டுகோள்

தினத்தந்தி
|
8 Dec 2023 10:21 PM IST

அடிப்படை கட்டமைப்பை ஏற்படுத்தி மழை வெள்ளத்திலிருந்து சென்னை மாநகரைக் காக்க தவறிய திராவிட மாடல் அரசு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியை வழங்குவதிலும் முற்றாகத் தோல்வியை தழுவியுள்ளது பெருங்கொடுமை என்று சீமான் கூறியுள்ளார்.

சென்னை,

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

பெருமழை வெள்ளத்தால் சென்னை மாநகரம் தத்தளிக்கின்றது. மழை நின்று முழுதாக 36 மணி நேரமாகியும் இன்னும் பல பகுதிகள் இடுப்பளவு நீரில் மூழ்கியுள்ளன. மின்சாரம் மற்றும் தொலைதொடர்பு முற்றாகத் துண்டிக்கப்பட்டு, உதவிகூடக் கோர முடியாத உயிர் ஆபத்தான சூழலில் மக்கள் சிக்கித்தவிப்பதை காணும்போது நெஞ்சம் பதைபதைக்கின்றது.

வீட்டைவிட்டு வெளிவர முடியாமல் மாடிகளில் முடங்கியுள்ள ஆயிரக்கணக்கான மக்களை இன்னும் மீட்டபாடில்லை. பால் கிடைக்காமல் குழந்தைகளும், உணவும், குடிநீரும் கிடைக்காமல் மக்களும், மருந்துகள் கிடைக்காமல் நோயாளிகளும், முதியவர்களும் தவித்துவருகின்றனர். வாழ்வாதாரம் இழந்து, சென்னை மாநகரைச் சுற்றிலும் மக்கள் அல்லலுறும் சூழல் காணப்படுவது மிகுந்த மனவேதனை அளிக்கிறது.

அடிப்படை கட்டமைப்பை ஏற்படுத்தி மழை வெள்ளத்திலிருந்து சென்னை மாநகரைக் காக்க தவறிய திராவிட மாடல் அரசு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியை வழங்குவதிலும் முற்றாகத் தோல்வியை தழுவியுள்ளது பெருங்கொடுமையாகும். இத்தகைய துயர்மிகுச் சூழலில், கடந்த 2015 ஆம் ஆண்டு பெருவெள்ள பேரழிவிலிருந்து தலைநகர் சென்னையை மீட்க எப்படி தமிழ்நாட்டின் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் மக்கள் தாமாக ஓடோடி வந்து உதவிக்கரம் நீட்டினீர்களோ, அதைப்போலவே தற்போதும் நம்மை நாமே காத்துக்கொள்ள உதவ வேண்டியதும் அவசர, அவசிய இன்றியமையாத தேவையாகும்.

சென்னையில் பெரும் பாதிப்புக்குள்ளாகி தவித்து நிற்கும் மக்களுக்கு, தமிழ்நாடு முழுவதுமுள்ள என் உயிருக்கினிய தாய்த்தமிழ் உறவுகள் உடனடியாக தங்களால் இயன்ற உதவிகளைச் செய்து கொடுத்து, பெருவெள்ள பேரழிவிலிருந்து நம் மக்களையும், தலைநகரையும் மீட்க உதவிட வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் அவர் பதிவிட்டு உள்ளார்.

மேலும் செய்திகள்