கழிவுகளோடு வந்த கேரள வண்டி மடக்கி பிடித்த தமிழக இளைஞர்கள் - தமிழக எல்லையில் பரபரப்பு
|ஆட்டோவில் கோழி கழிவுகளை எடுத்து வந்த நபர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கோவை,
கோவை வாளையாறு எல்லையில், கேரளாவில் இருந்து கொண்டு வந்து கோழிக் கழிவுகளை கொட்டிய நபர்களை மடக்கி பிடித்த உள்ளூர் இளைஞர்கள், அந்த கழிவுகளை மீண்டும் எடுக்க வைத்தனர். கேரளாவில் இருந்து கோழி கழிவுகள் மற்றும் மருத்துவ கழிவுகளை, தமிழக எல்லைகளில் உள்ள நெடுஞ்சாலைகளில் இரவு நேரங்களில் கொட்டிச் செல்வதை சிலர் வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
இந்நிலையில் கேரளாவில் இருந்து மினி ஆட்டோவில் கோழி கழிவுகளை ஏற்றி வந்த நபர்கள், கோவை வாளையாறு எல்லை நெடுஞ்சாலை மேம்பாலம் அருகே கொட்டியுள்ளனர். இதனை கண்ட உள்ளூர் இளைஞர்கள் தட்டிக் கேட்டபோது, அவர்களை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர்.
இதையடுத்து ஊர் மக்களையும் அழைத்து, சட்ட நடவடிக்கை எடுப்பதாக எச்சரிக்கை விடுத்ததை அடுத்து, அந்த நபர்கள் மீண்டும் கோழி கழிவுகளை தங்கள் ஆட்டோவில் அள்ளிச் சென்றனர். தகவல் அறிந்து வந்த கே.ஜி.சாவடி போலீசார், ஆட்டோவில் கோழி கழிவுகளை எடுத்து வந்த நபர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.