ராமநாதபுரம்
தமிழக மீனவர்களை பாதுகாக்கும் கடமையை மத்திய அரசு செய்யவில்லை-வைகோ குற்றச்சாட்டு
|தமிழக மீனவர்களை பாதுகாக்கும் கடமையை மத்திய அரசு செய்யவில்லை என்று வைகோ பேசினார்.
ராமேசுவரம்,
தமிழக மீனவர்களை பாதுகாக்கும் கடமையை மத்திய அரசு செய்யவில்லை என்று வைகோ பேசினார்.
திருமண விழா
ராமேசுவரம் அருகே பாம்பனில் நேற்று, ராமநாதபுரம் மாவட்ட ம.தி.மு.க. பொறுப்பாளர் பேட்ரிக் இல்ல திருமண விழா நடந்தது. இதில் கலந்து கொண்ட அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ பேசியதாவது:-
நாடாளுமன்றத்தில் நான்தான் மீனவர்கள் பிரச்சினை குறித்து அதிகமாக பேசியுள்ளேன். இந்த மாதத்தில் மட்டும் 3 முறை தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து, படகுகளை பறிமுதல் செய்துள்ளது.
7 நாட்டு துணையோடுதான் இலங்கை அரசு விடுதலைப்புலிகளை தோற்கடித்தது. தமிழர்களை கொன்று குவித்த சிங்கள அதிபர் தனது உயிரை காப்பாற்றிக் கொள்ள இன்று ஒவ்வொரு நாடாக அடைக்கலம் கேட்டு அலையும் நிலை ஏற்பட்டுள்ளது. இது போன்ற ஒரு நிலை வரும் என்று நான் அப்போதே நினைத்தேன். அது இன்று நடந்துள்ளது.
நம் நாட்டின் சொத்து
விடுதலைப்புலிகள் இருந்திருந்தால் மீனவர்களுக்கு எந்த ஒரு பிரச்சினையும் வந்திருக்காது. எந்த ஒரு மாநிலத்தைச் சேர்ந்த மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டாலும் உடனடியாக அது குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்துவேன். நாடாளுமன்றத்தில் தொடர்ந்து குரல் கொடுப்பேன். மீனவர்கள் நமது நாட்டின் சொத்து. அவர்களை நான் எப்போதும் நேசிப்பேன்.
பலமுறை தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள போதிலும், ஒரு முறை கூட இந்திய கடற்படை அதை தடுத்து நிறுத்தியது இல்லை. பிறகு எதற்கு கடற்படை? என நாடாளுமன்றத்தில் நான் கேள்வி எழுப்பினேன். தமிழக மீனவர்களை பாதுகாக்க வேண்டிய கடமை மத்திய அரசிடம் உள்ளது. ஆனால் அதை மத்திய அரசு செய்யவில்லை. இவ்வாறு வைகோ பேசினார்.
அப்போது கட்சியின் தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ, மாவட்ட பொறுப்பாளர் பேட்ரிக், மாநில துணை பொதுச்செயலாளர் ராஜேந்திரன், எம்.எல்.ஏ.க்கள் பூமிநாதன், சதன் திருமலைக்குமார், சின்னப்பா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.