கொரோனா தடுப்பூசி செலுத்தாத அனைவருக்கும் தடுப்பூசி போட 10-ந் தேதி சிறப்பு நடவடிக்கை- அமைச்சர் மா.சுப்பிரமணியன்
|இதுவரை முதல், 2-வது தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தாத அனைவருக்கும் வருகிற 10-ந் தேதி நடைபெற உள்ள மெகா முகாமின் போது தடுப்பூசி செலுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
அமைச்சர் ஆய்வு
செங்கல்பட்டு மாவட்டம், இடைக்கழிநாட்டில் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
அதேபோன்று முதலியார்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற 12-14 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமையும் அவர் ஆய்வு செய்தார்.
இதைத்தொடர்ந்து கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கினார்.
நிகழ்ச்சி முடிவில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
'மெகா' தடுப்பூசி முகாம்
உலகில் 110 நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. தற்போது பிஏ4, பிஏ5 எனப்படும் ஒமைக்ரானின் புதிய வகை தொற்று பரவி வருகிறது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் 10-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, கோவை போன்ற பல மாவட்டங்களில் கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்து வருவதால் தடுப்பு நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்பட்டு உள்ளது.
மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த கள பணியாளர்களின் காலிப்பணியிடங்களை நிரப்பும் பணிகள் தொடங்கியிருக்கிறது. 4 ஆயிரத்து 308 பேர் புதிதாக நியமிக்கப்பட உள்ளனர்.
வருகிற 10-ந் தேதி தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட இடங்களில் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட இருக்கிறது.
வீடுதோறும் அறிவுறுத்தல்
தமிழகத்தில் 34 லட்சத்து 46 ஆயிரம் பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டியது உள்ளது. ஒரு கோடியே 8 லட்சத்து 21 ஆயிரத்து 539 பேர் 2-வது தவணை தடுப்பூசி செலுத்த வேண்டியது இருக்கிறது. இவர்களது வீடுகளுக்கு நேரடியாக சென்று தடுப்பூசி செலுத்த அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
தமிழகத்தை பொறுத்தவரை 12 வயது முதல் 14 வயது வரை சிறுவர், சிறுமியர் 21 லட்சத்து 21 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதில் 86.09 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி உள்ளனர். இதில் 2-வது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டியவர்கள் 58.03 சதவீதம் பேர் ஆவர். இவர்களில் யாருக்கெல்லாம் 2-வது தவணை தடுப்பூசி போட வேண்டும் என ஆசிரியர்களிடம் கேட்டறிந்து தடுப்பூசி போடும் பணி நடைபெற்று கொண்டிருக்கிறது.
தமிழகத்தை பொறுத்தவரை இதுவரை முதல் தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் எண்ணிக்கை 95 சதவீதத்தை நெருங்கி கொண்டிருக்கிறது. 85.37 சதவீதம் பேர் 2-வது தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர்.
கட்டுப்பாடுகளுக்கு அவசியம் இல்லை
பொருளாதார ரீதியிலான சரிவு வந்துவிடக்கூடாது என்பதற்காக பொதுக்கட்டுப்பாடு தற்போது தேவையில்லை என்று முதல்-அமைச்சர் கூறியுள்ளார்.
தமிழகத்தில் பாதிப்புக்குள்ளான 14 ஆயிரத்து 504 பேரில் 95 சதவீதம் பேர் வீடுகளில் இருக்கிறார்கள். பாதிக்கப்பட்டவர்களில் 40 சதவீதம் பேர் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டிருந்தால் மட்டுமே கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
தமிழகத்தில் தற்போது 5 சதவீதம் பேர் மட்டுமே அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். எனவே கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பதற்கான அவசியம் இல்லை. சமூக விழா, அரசியல் நிகழ்வுகளில் 10-க்கும் மேற்பட்டவர்கள் ஒன்றாக கூடும் இடங்களில் முககவசம் அணிய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது ஜி.செல்வம் எம்.பி., க.சுந்தர் எம்.எல்.ஏ. ஆகியோர் உடன் இருந்தனர்.