திருவள்ளூர்
தமிழ்நாடு மாநில காவல்துறை மண்டல ஜூடோ கிளாஸ்டர் போட்டி நிறைவு விழா
|ஆவடி காவல் ஆணையரகத்தில் 63-வது தமிழ்நாடு மாநில காவல்துறை மண்டல ஜூடோ கிளாஸ்டர் போட்டி கடந்த 16-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை 3 நாட்கள் ஆவடியில் நடைபெற்றது.
ஜூடோ, கராத்தே, ஜிம்னாஸ்டிக், டைக்குவாண்டோ, பென்ஸ்காக் ஸ்லாட் மற்றும் வாள்வீச்சு ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன. இப்போட்டிகளில் சென்னை பெருநகர காவல் துறை, ஆவடி, தாம்பரம் மற்றும் தமிழ்நாடு ஆயுதப்படை போலீசார் பங்கேற்றனர். தமிழ்நாடு காவல்துறையின் மண்டல அளவிலான இப்போட்டியின் நிறைவு விழா நேற்று ஆவடி காவல் ஆணையராக ஆயுதப்படை மைதானத்தில் ஆவடி போலீஸ் கமிஷனர் கி.சங்கர் தலைமையில் நடைபெற்றது.
இதில் ஆவடி போலீஸ் இணை கமிஷனர் விஜயகுமார், துணை கமிஷனர்கள் பெருமாள், பாஸ்கரன், பாலகிருஷ்ணன், ஜெயலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து இப்போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் கேடயங்கள், பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார். இப்போட்டியில் வெற்றி பெற்ற புள்ளிகளின் அடிப்படையில் தமிழ்நாடு ஆயுதப்படை அணி முதல் இடத்தையும், ஆவடி காவல் ஆணையராக அணி 2-ம் இடத்தையும் பெற்றன. நிகழ்ச்சியில் காவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.