தமிழக மழை, வெள்ள பாதிப்பு: தேசியப் பேரிடராக அறிவிக்க முடியாது - நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்
|இதுவரை எந்த அரசும் தேசிய பேரிடர் என்பதை அறிவித்தது கிடையாது. வங்கிகள் மூலம் உதவி செய்ய மாநில அரசு கோரிக்கை வைத்துள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் கடந்த 17, 18-ந் தேதிகளில் பெய்த கனமழை காரணமாக பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தால் கடும் சேதம் அடைந்தன. வெள்ள பாதிப்புகளை சீரமைக்கும் பணி, நிவாரண பணி மற்றும் கணக்கெடுப்பு பணிகளில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் அமைச்சர்கள், கண்காணிப்பு அலுவலர்கள், அரசு உயர் அதிகாரிகள் ஒருங்கிணைந்து ஈடுபட்டு வருகின்றனர்.
தென் மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வுக் கூட்டத்தின்போது, தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, மத்திய இணை மந்திரி எல்.முருகன், தூத்துக்குடி எம்.பி கனிமொழி ஆகியோரும் பங்கேற்றனர்.
அப்போது நிர்மலா சீதாராமனிடம் சீரமைப்பு பணிகளுக்கான நிவாரணம் தொடர்பாக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் 72 பக்க மனுவை அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்கினார்.
இதுதொடர்பாக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில், "இந்தியாவின் இரண்டாவது பெரிய கடற்கரையைக் கொண்டிருக்கும் தமிழகம், கடந்த நூற்றாண்டில் 50 சூறாவளிகளை எதிர்கொண்டது. தொடர்ந்து அச்சுறுத்தலில் உள்ளது. மிக்ஜாம் புயலுக்குப் பின் தென் மாவட்டங்களில் பெய்த தொடர் கனமழை கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் தற்போதைய நிலை, தமிழக அரசு மேற்கொண்டு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து, தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, தூத்துக்குடி எம்.பி கனிமொழி மற்றும் மூத்த அதிகாரிகள் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு விளக்கமளித்தனர்.
மேலும், வெள்ள நிவாரணம் மற்றும் மறுசீரமைப்பு பணிகளுக்கு நிதியின் முக்கிய தேவையை சுட்டிக்காட்டி ஒரு விரிவான 72 பக்க கோரிக்கை மனுவையும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கொடுத்துள்ளனர். மாநில பேரிடர் மீட்பு நிதியில் ஒரு குறிப்பிட்ட அளவிலான நிதி மட்டுமே உள்ளது. அந்த நிதி வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள சேதங்களைச் சீரமைக்க போதுமானதாக இல்லை. எனவே, இதுபோன்ற ஆபத்தான சவால்களை எதிர்கொள்ள தமிழகத்துக்கு மத்திய அரசிடமிருந்து போதுமான அளவு நிதி தேவைப்படுகிறது" என்று அவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தூத்துக்குடி, உமரிக்காட்டில் வெள்ள பாதிப்பை நேரில் பார்வையிட வந்த மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனிடம் பொதுமக்கள் மழை, வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டி கோரிக்கை வைத்தனர். அதற்கு மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன், வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வாய்ப்பு இல்லை. சுனாமியை கூட தேசிய பேரிடராக அறிவிக்கவில்லை. இதுவரை எந்த அரசும் தேசிய பேரிடர் என்பதை அறிவித்தது கிடையாது. வங்கிகள் மூலம் உதவி செய்ய மாநில அரசு கோரிக்கை வைத்துள்ளது. இதற்கு ரிசர்வ் வங்கி விதிமுறைகள் உள்ளன. வங்கிகள் மூலம் கடன் வழங்க ஏற்பாடு செய்யலாம்" என்று அவர் பதில் அளித்தார்.