31-ந்தேதி பிரமாண்ட விழா: தமிழக போலீசாருக்கு ஜனாதிபதியின் கவுரவ கொடி
|தமிழக போலீசாருக்கு மிக உயரிய ஜனாதிபதியின் சிறப்பு கொடி வழங்கப்படுகிறது. துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வழங்குகிறார்
சென்னை:
தமிழக போலீசாருக்கு மிக உயரிய ஜனாதிபதியின் சிறப்பு கொடி வழங்கப்படுகிறது. இதுபோன்ற சிறப்பு கொடி இந்தியாவில் இதுவரை 10 மாநில போலீசாருக்கு தான் வழங்கப்பட்டுள்ளது. தென்மாநிலங்களில் இந்த சிறப்பை பெறும் முதல் மாநிலம் தமிழகம் தான்.
தமிழக போலீசாருக்கு ஜனாதிபதியின் சிறப்பு கவுரவ கொடி வழங்கும் விழா வருகிற 22-ந்தேதி சென்னையில் நடைபெறும் என்று தகவல் வெளியாகி இருந்தது. தற்போது வருகிற 31-ந்தேதியன்று தமிழக போலீசாருக்கு ஜனாதிபதியின் சிறப்பு கொடி வழங்கும் விழா, சென்னை ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் காலை 9.30 மணிக்கு நடைபெறுகிறது. துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு இந்த விழாவில் கலந்துகொண்டு, ஜனாதிபதியின் சிறப்பு கவுரவ கொடியை தமிழக போலீசாருக்கு வழங்க உள்ளார்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இந்த விழா நடைபெறுகிறது. விழாவுக்கான பிரமாண்ட ஏற்பாடுகளை டி.ஜி.பி. சைலேந்திரபாபு மற்றும் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உள்ளிட்ட அதிகாரிகள் செய்து வருகிறார்கள்.