தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் முடிந்தது: இன்று பரிசீலனை
|39 நாடாளுமன்ற தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் நேற்றுடன் முடிந்தது. 1,749 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருக்கின்றன.
சென்னை,
நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் நிலையில், தமிழ்நாட்டை பொறுத்தவரை முதல்கட்டமாக ஏப்ரல் 19-ந் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டை பொறுத்தவரை தி.மு.க. தலைமையில் ஒரு கூட்டணியும், அ.தி.மு.க தலைமையில் ஒரு கூட்டணியும், பா.ஜனதா தலைமையில் மற்றொரு கூட்டணியும், நாம் தமிழர் கட்சி தனியாகவும் இந்த தேர்தலில் களம் இறங்கியுள்ளன.
தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு என பலகட்ட பணிகளை பக்குவமாக முடித்த தலைவர்கள், தற்போது சூறாவளி சுற்றுப்பயணம் செய்து தங்களது வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய தொடங்கி விட்டனர்.
ஜனநாயக திருவிழாவான நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20-ந் தேதி தொடங்கியது. கட்சி வேட்பாளர்களும், சுயேச்சைகளும் போட்டிப்போட்டுக்கொண்டு தங்களது மனுக்களை தேர்தல் அலுவலகங்களில் தாக்கல் செய்தனர். ஆட்டம், பாட்டம், வாணவேடிக்கைகளுடன் ஊர்வலமாக சென்று அவர்கள் தங்களது வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.
இதில் பங்குனி உத்திர தினமாக கடந்த 25-ந் தேதி மிகவும் நல்லநாள் என்பதால், அன்றைய தினத்தில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் 33 பேரும் தங்களது மனுக்களை தாக்கல் செய்தனர். இதேபோல் தி.மு.க., பா.ஜனதா, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களும் அதே நாளில் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். அன்று மட்டும் ஒரே நாளில் 403 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.
நேற்று முன்தினமும் வேட்புமனு தாக்கல் விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்நிலையில் வேட்புமனு தாக்கல் நேற்றுடன் முடிந்தது. இதனால் தேர்தல் அலுவலகங்களில் காலை முதல் பிற்பகல் 3 மணி வரை ஏராளமானோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
தி.மு.க., காங்கிரஸ், பா.ஜனதா, பா.ம.க., நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களும், சுயேச்சை வேட்பாளர்களும் வேட்புமனுக்களை அதிகாரிகளிடம் கொடுத்தனர். சில இடங்களில் 3 மணிக்கு பிறகு வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது. அவர்கள் ஒருவர் பின் ஒருவராக அனுமதிக்கப்பட்டு மனு தாக்கல் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
கடைசி நாளான நேற்று பல்வேறு கட்சிகளின் முக்கிய வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.
திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதியில் மொத்தம் 31 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. தென்சென்னையில் 28 மனுக்களும், மத்திய சென்னையில் 22 மனுக்களும், வடசென்னையில் 31 மனுக்களும் தாக்கல் ஆகியுள்ளது. இவ்வாறு தமிழகம் முழுவதும் உள்ள 39 தொகுதிகளிலும் 1,749 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. கடைசி நாளில் சுயேச்சைகளே அதிக அளவில் மனு தாக்கல் செய்து உள்ளனர்.
நாடாளுமன்ற தேர்தலோடு சேர்த்து குமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் போட்டியிட 18 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
இந்நிலையில் வேட்புமனுக்கள் மீது இன்று பரிசீலனை நடைபெறுகிறது. அந்தந்த தொகுதிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள பொதுப்பார்வையாளர்கள் முன்னிலையில் இந்த வேட்புமனுக்கள் பரிசீலனை நடக்கிறது. முறையாக கையெழுத்து போடப்படாத, ஆவணங்கள் இணைக்கப்படாத மனுக்கள் தள்ளுபடி செய்யப்படும்.
மனுக்களை வாபஸ் பெற விரும்புகிறவர்கள் 30-ந் தேதிக்குள் வாபஸ் பெற வேண்டும். அதன் பின்னர் அன்றைய தினம் மாலையே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.