தூத்துக்குடி
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி தலைமை அலுவலகத்தில் 20 மணி நேரம் நடந்த வருமானவரி சோதனை நிறைவு
|தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி தலைமை அலுவலகத்தில் 20 மணி நேரம் நடந்த வருமானவரி சோதனை நிறைவு பெற்றது.
சோதனை
தூத்துக்குடி வி.இ.ரோட்டில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் தலைமை அலுவலகம் அமைந்து உள்ளது. இந்த அலுவலகத்துக்கு நேற்று முன்தினம் காலை 10.30 மணி அளவில் மதுரை, திருச்சி, சேலம், கோவை மாவட்டங்களை சேர்ந்த வருமான வரித்துறை நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் வந்தனர். அவர்கள் வங்கி தலைமை அலுவலகத்தின் 2 கட்டிடங்களிலும் உள்ள முக்கிய அதிகாரிகளிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு, சோதனை செய்தனர்.
இதற்கிடையே, வங்கி தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில், சில பரிவர்த்தனையின் மீது சந்தேகம் ஏற்பட்டதால், வருமானவரித்துறை சட்டம் 285 பி.ஏ-ன் கீழ் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்ததாக கூறப்பட்டது. அதே நேரத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜியின் நிதிபரிவர்த்தனை தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதாகவும் தகவல்கள் வெளியானது.
20 மணி நேரம்
இதனால் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவு முழுவதும் அலுவலகத்திலேயே இருந்து ஆவணங்களை சரிபார்த்தனர். பல்வேறு சந்தேகங்களையும் அதிகாரிகளிடம் கேட்டு விளக்கம் பெற்றனர். 20 மணி நேரம் நீடித்த இந்த சோதனை நேற்று காலை 6.30 மணி அளவில் முடிவடைந்தது.
அப்போது, விசாரணை நடத்திய அதிகாரிகள் சுமார் 5 பைகளில் சில ஆவணங்களையும் எடுத்து சென்றனர். இந்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியது.