< Back
மாநில செய்திகள்
தமிழக சட்டப்பேரவை கூட்டம் கவர்னர் உரையுடன் இன்று துவக்கம்

கோப்புப்படம் 

மாநில செய்திகள்

தமிழக சட்டப்பேரவை கூட்டம் கவர்னர் உரையுடன் இன்று துவக்கம்

தினத்தந்தி
|
9 Jan 2023 2:47 AM GMT

இந்தாண்டுக்கான சட்டப்பேரவை கூட்டம் கவர்னர் உரையுடன் இன்று காலை 10 மணிக்கு தொடங்குகிறது.

சென்னை,

2023ம் ஆண்டிற்கான முதல் சட்டப்பேரவை கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் உள்ள சட்டப்பேரவை வளாக கூட்டரங்கில் இன்று காலை 10 மணிக்கு கூடுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் முதல் கூட்டம் கவர்னர் உரையுடன் தொடங்குவது மரபு. அதன்படி, தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி உரையுடன் இந்தாண்டுக்கான கூட்டம் தொடங்குகிறது

சட்டப்பேரவை முதல் கூட்டத்துக்காக, கவர்னர் மாளிகையில் இருந்து காலை 9.30 மணிக்கு புறப்படும் ஆளுநர் ஆர்.என்.ரவி, தலைமைச்செயலகத்துக்கு 9.50 மணிக்கு வருகிறார். கவர்னரை பேரவைத் தலைவர் மு.அப்பாவு, செயலர் கி.சீனிவாசன் ஆகியோர் வரவேற்கின்றனர். அதன்பின், காலை 10 மணிக்கு கூட்ட அரங்குக்குள் வரும் கவர்னர் தனது உரையை வாசிப்பார். உரையை வாசித்து முடிக்கப்பட்டதும், அதன் தமிழாக்கத்தை பேரவைத்தலைவர் மு.அப்பாவு வாசிப்பார்.

தமிழக அரசின் செயல்பாடுகள், திட்டங்கள் குறித்து பாராட்டியும், சில புதிய திட்டங்களுக்கான அறிவிப்புகளும் கவர்னர் உரையில் வெளியாக வாய்ப்புள்ளது. மேலும், தமிழக அரசின் எதிர்பார்ப்புகள் குறித்து மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையிலான, சில வலியுறுத்தல்களையும் அவர் வெளியிடலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், தமிழகத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனம் குறித்த மசோதா, இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு, நீட் தேர்வு விலக்கு சம்பந்தமாக ஒன்றிய அரசை வலியுறுத்தும் வகையில் விவாதங்கள் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் செய்திகள்