< Back
மாநில செய்திகள்
சட்டம் ஒழுங்கு சீரழிவில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக விளங்கிக் கொண்டிருக்கிறது - ஓ.பன்னீர்செல்வம்

கோப்புப்படம் 

மாநில செய்திகள்

சட்டம் ஒழுங்கு சீரழிவில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக விளங்கிக் கொண்டிருக்கிறது - ஓ.பன்னீர்செல்வம்

தினத்தந்தி
|
29 July 2024 10:03 PM IST

கொலைக் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுத்து, அவர்களுக்கு உரிய தண்டனையைப் பெற்றுத் தர வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

சென்னை,

தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு மற்றும் அதனைத் தொடர்ந்து நடைபெற்ற மர்ம மரணங்கள் குறித்த வழக்குகள் 90 நாட்களில் முடிக்கப்படும் என்ற வாக்குறுதி தற்போதைய முதல்-அமைச்சரால் 2021-ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின்போது அளிக்கப்பட்டது. இன்று தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்று கிட்டத்தட்ட 1,190 நாட்கள் முடிந்துள்ள நிலையில் மகா சீரியல் தொடர் போல நீண்டு கொண்டே செல்கிறது. பல வழக்குகளில் இந்த நிலைமைதான் நீடிக்கிறது. தி.மு.க. அரசின் இதுபோன்ற நடவடிக்கையும், பல்வேறு குற்றச் செயல்களில் தி.மு.க.வினரே ஈடுபடுவதும்தான் தமிழ்நாட்டில் குற்றச் செயல்கள் அதிகரித்துக் கொண்டே வருவதற்கான காரணங்கள் என்று சொன்னால் அது மிகையாகாது.

கடலூரில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வார்டு செயலாளர் பத்மநாதன் வெட்டிக் கொலை, கன்னியாகுமரியில் காங்கிரஸ் கட்சியின் பெண் கவுன்சிலர் உஷாகுமாரியின் கணவர் ஜாக்சன் வெட்டிக் கொலை, சிவகங்கை அருகே வேலாங்குளம் கிராமத்தைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகி செல்வக்குமார் வெட்டி கொலை, பட்டுக்கோட்டை அருகே விவசாயி சின்னக்குழந்தை சரமாரி வெட்டிக் கொலை, சென்னை எம்.ஜி.ஆர். நகரில் மூதாட்டி துண்டு துண்டாக வெட்டிக் கொலை. கரூர் மாவட்டம், காந்தி கிராமம், கம்பன் தெருவைச் சேர்ந்த ஜீவா வெட்டிக் கொலை, கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே தி.மு.க. ஒன்றியச் செயலாளர் தலைமையில் பாக்யராஜின் குடும்பத்தினர்மீது கொலைவெறித் தாக்குதல் என அன்றாடம் கொலைகள் மற்றும் கொலைவெறித் தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், கோவனூர் ஊராட்சியில் சாலை போட்டதற்கான ரசீதை சிவகங்கை ஊராட்சி ஒன்றியத்தின் உதவிப் பொறியாளரிடத்தில் ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் முருகன் கொடுத்ததாகவும், டெண்டர் விடாமல் எப்படி சாலை போடப்பட்டது என்று உதவிப் பொறியாளர் கேட்டதற்கு, ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் உதவிப் பொறியாளரை நாற்காலியை தூக்கி அடிக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது. இதற்கான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன. ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென சிவகங்கை ஊராட்சி ஒன்றிய ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அரசு ஊழியர்களை மிரட்டுவது, காவல் துறையினரை மிரட்டுவது, பொதுமக்களை மிரட்டுவது என தி.மு.க.வினரே வன்முறையில் ஈடுபடுவதும், பல சமூக விரோதச் செயல்களுக்கு தி.மு.க.வினரே உடந்தையாக இருப்பதும்தான் குற்ற நிகழ்வுகள் அதிகரிப்பதற்குக் காரணமாக இருக்கின்ற நிலையில், இதனைக் கட்டுப்படுத்த வேண்டிய கடமையும், பொறுப்பும் முதல்-அமைச்சருக்கு உண்டு. இதைப்பற்றி துளியும் கவலைப்படாமல், சட்டம்-ஒழுங்கு சிறப்பாக இருப்பதாகத் தனக்குத் தானே தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கிறார். முதல்-அமைச்சரின் இதுபோன்ற செயல்பாட்டால் பொதுமக்களின் உயிருக்கும், உடைமைக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு சீரழிவில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழ்நாடு விளங்கிக் கொண்டிருக்கிறது. இந்த நிலை நீடித்தால், தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி குன்றி, பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்படும்.

எனவே, கொலைக் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுத்து, அவர்களுக்கு உரிய தண்டனையைப் பெற்றுத் தரவும், காவல் துறையினரைக் கண்டு ரவுடிகள் அஞ்சும் நிலையை ஏற்படுத்தவும் முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்