முதலீட்டாளர்களின் முதல் தேர்வாக தமிழ்நாடு உள்ளது: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
|பெரம்பலூர் மாவட்டத்தில் புதிய காலணி தொழிற்சாலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
சென்னை,
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 28-ந்தேதி பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, எறையூரில் சிப்காட் தொழில் பூங்காவினை தொடங்கி வைத்து, கோத்தாரி பீனிக்ஸ் நிறுவனத்தின் காலணி தொழிற்சாலை தொடங்குவதற்கு அடிக்கல் நாட்டி சென்றார்.
இதையடுத்து சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் காலணி தொழிற்சாலை அமைக்கும் பணிகள் துரிதமாக நடைபெற்றன. இந்த நிலையில், அடிக்கல் நாட்டப்பட்ட ஒரே ஆண்டில், காலணி உற்பத்தி தொழிற்சாலையினை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலிக்காட்சி வாயிலாக இன்று தொடங்கி வைத்தார்.
அதன்பின்னர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
தொழில்துறையில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. முதலீட்டாளர்கள் விரும்பும் மாநிலமாக தமிழ்நாடு மாறியுள்ளது. முதலீட்டாளர்களின் முதல் தேர்வாக தமிழ்நாடு உள்ளது. வளர்ச்சி திட்டங்கள் மூலம் வேலைவாய்ப்பை உருவாக்குவதில் உறுதியாக இருக்கிறோம்.
முதற்கட்டமாக ரூ.400 கோடி முதலீட்டில் 4,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2028-ம் ஆண்டிற்குள் ரூ.2,440 கோடி முதலீட்டில் 29,500 பேருக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படவுள்ளது; ஒரு ட்ரில்லியன் பொருளாதாரம் என்ற இலக்கை அடைவோம் என்ற நம்பிக்கை உள்ளது. ஜனவரியில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் நடைபெற உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.