'தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தங்கள் குழந்தைகளை படிக்க வைக்கும் அளவிற்கு பாதுகாப்பு உள்ளது' - அமைச்சர் எ.வ.வேலு
|வடமாநில தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு இருப்பதால் தான், அவர்கள் தங்கள் குழந்தைகளை இங்கு படிக்க வைப்பதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
நீலகிரி,
நீலகிரி மாவட்டம் உதகையில் வடமாநிலங்களைச் சேர்ந்த 950 தொழிலாளர்களிடம் அமைச்சர் எ.வ.வேலு, தி.மு.க. எம்.பி. ஆ.ராசா ஆகியோர் ஆலோசனை மேற்கொண்டனர். அப்போது வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என அவர்கள் அறிவுறுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எ.வ.வேலு, நீலகிரி மாவட்டத்தில் தேயிலை தோட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சுமார் 11 ஆயிரம் வடமாநில தொழிலாளர்கள் வேலை செய்து வருவதாகவும், அவர்கள் தங்கள் குழந்தைகள் சுமார் 1,250 பேரை அங்கன்வாடிகளில் படிக்க வைக்கிறார்கள் என்றும் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் தொடர்ந்து பணியாற்றி வரும் வடமாநில தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு இருப்பதால் தான், அவர்கள் தங்கள் குழந்தைகளை இங்கு படிக்க வைப்பதாக தெரிவித்த அமைச்சர் எ.வ.வேலு, விஷமத்தனமான பிரச்சாரங்களுக்கு இங்குள்ள தொழிலாளர்கள் இடம் தரவில்லை என்று கூறினார்.