< Back
மாநில செய்திகள்
போதை கலாசாரத்தால் தமிழகம் சீரழியும் நிலை உள்ளது  - மதுரையில் டி.டி.வி.தினகரன் பேட்டி
மதுரை
மாநில செய்திகள்

போதை கலாசாரத்தால் தமிழகம் சீரழியும் நிலை உள்ளது - மதுரையில் டி.டி.வி.தினகரன் பேட்டி

தினத்தந்தி
|
17 May 2023 3:09 AM IST

தமிழகம் போதை கலாசாரத்தால் சீரழியும் நிலை உள்ளது என மதுரையில் டி.டி.வி.தினகரன் தெரிவித்தார்.


தமிழகம் போதை கலாசாரத்தால் சீரழியும் நிலை உள்ளது என மதுரையில் டி.டி.வி.தினகரன் தெரிவித்தார்.

சுயநலவாதிகள்

அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் நேற்று மதுரை வந்தார். அவர் நகரில் பல்வேறு இடங்களில் கட்சி கொடிகளை ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நானும், ஓ.பன்னீர்செல்வமும் இணைந்ததற்கு இப்படி ஏன் பதறுகிறார்கள்?. நானும், ஓ.பன்னீர்செல்வமும் நீண்ட கால நண்பர்கள். இடையில் விதியின் சதியால், சிலரின் தவறான தூண்டுதலால் பிரிந்திருந்தோம். ஜெயலலிதாவிற்கு துரோகம் செய்தவர்களை வீழ்த்தாமல் ஓய மாட்டோம்.

அ.தி.மு.க. இன்றைக்கு ஒரு சில சுயநலவாதிகளின் கையில் சிக்கியுள்ளது. பண பலத்தை மட்டும் நம்பி அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள். அதை மீட்டெடுக்கும் பொறுப்பு என்னிடமும், ஓ.பன்னீர்செல்வத்திடமும் தொண்டர்களால் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதனை நாங்கள் நிச்சயம் உறுதியாக நிறைவேற்றி காட்டுவோம்.

போதை கலாசாரம்

தி.மு.க. தேர்தல் வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்றவில்லை. தி.மு.க.வின் ஆட்சிக்கு 60 மாதங்களில் வரக்கூடிய எதிர்ப்பு 24 மாதங்களில் வந்து கொண்டிருக்கிறது. போலீசாரின் மெத்தன போக்கால் கள்ளச்சாராயத்தால் 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இது போன்ற நிகழ்வுகள் இனி தமிழ்நாட்டில் நடக்காமல் தடுக்க வேண்டும். தமிழகத்தில் தற்போது போதை கலாசாரத்தால் மாணவர்கள் உள்பட அனைவரும் சீரழியும் நிலை உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். பேட்டியின்போது மாவட்ட துணைத் தலைவர் கஜேந்திரன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்