போதை பழக்கத்தால் மிகவும் பாதிப்படைந்த மாநிலமாக தமிழகம் மாறி வருகிறது: கவர்னர் ஆர்.என்.ரவி
|போதைப்பொருட்கள் விற்பனை என்பது தீவிரவாதம் என்று கவர்னர் ஆர்.என்.ரவி கூறினார்.
தென்காசி,
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் நடைபெற்ற போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் கூட்டத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி பேசியதாவது:-
தமிழகம் போதை பழக்கத்தால் மிகவும் பாதிப்படைந்த மாநிலமாக மாறி வருகிறது. இங்கு போதைப் பொருளான கஞ்சா அதிக அளவு புழக்கத்தில் உள்ளது. ஆந்திரா, கேரளா மாநிலங்களில் ஹெராயின் உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பனை நடக்கிறது. தமிழகத்தில் கவர்னராக நான் பொறுப்பேற்ற 3 ஆண்டுகளில் அதிக அளவு கஞ்சா பிடிக்கப்பட்டதாகவே தகவல்கள் உள்ளன.
மத்திய அரசின் ஏஜென்சிகள் கஞ்சா அல்லாத பிற ரசாயன போதைப்பொருட்களை தமிழகத்தில் அதிகளவு பறிமுதல் செய்து வருகின்றனர். தமிழக காவல்துறையால் ஒரு கிராம் அளவு கூட கஞ்சா தவிர்த்து பிற ரசாயன போதைப் பொருட்களை பறிமுதல் செய்ததாக தகவல்கள் இல்லை. போதைப்பொருட்கள் விற்பனை என்பது தீவிரவாதம். இந்தியாவில் போதைப்பொருள் தீவிரவாதத்தை ஊக்குவிக்க சர்வதேச ஏஜென்சிகள் நினைக்கிறார்கள்.
சென்னையின் பல பகுதிகளில் உள்ள பெற்றோர்கள் போதைப்பொருட்கள் தொடர்பான புகார்களை என்னிடம் தெரிவித்து வருகின்றனர். ரசாயன போதைப்பொருட்களின் புழக்கம் பெருமளவு அதிகரித்துள்ளது. அரசினால் மட்டுமே போதைப்பொருள் ஒழிப்பது என்பது சாத்தியமல்ல. அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்தால் மட்டுமே போதை ஒழிப்பு சாத்தியமாகும்.இவ்வாறு அவர் கூறினார்.