இன்புளுவென்சா காய்ச்சல் தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக சுகாதாரத்துறை
|இன்புளுவென்சா காய்ச்சல் தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
சென்னை,
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக மழை மற்றும் வெயில் என மாறி மாறி நிலவி வருவதால், வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. குறிப்பாக, குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு இந்த காய்ச்சல் வேகமாக பரவுகிறது. அந்த வகையில், சென்னை எழும்பூர் மருத்துவனையில் ஒரே நாளில் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் வைரஸ் காய்ச்சலால் அனுமதிக்கப்பட்டனர். 300 படுக்கைகள் கொண்ட இந்த மருத்துவமனையில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால், கூடுதலாக படுக்கைகள் அமைக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை மட்டுமின்றி, மதுரை, திருச்சி, நெல்லை போன்ற மாவட்டங்களிலும் குழந்தைகளுக்கு இதுபோன்ற வைரஸ் காய்ச்சல் பரவி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தமிழகத்தில் 282 குழந்தைகள் இன்புளுவென்ஸா என்ற காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் இன்புளுவென்சா காய்ச்சல் தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் அனைத்து சுகாதாரத்துறை மாவட்ட அதிகாரிகளுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் திடீர் வறட்டு இருமல், தொண்டை வலி, தலைவலி, மூக்கடைப்பு, உடல் வலி, உடல் சோர்வு ஆகியவை இன்புளுவென்சா காய்ச்சலின் அறிகுறிகள் என்று தெரிவித்துள்ளார். மேற்கண்ட அறிகுறிகளுடன் பொதுமக்கள் வந்தால் மருத்துவமனைகளில் காய்ச்சலுக்கான சிகிச்சை வழங்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
லேசான அறிகுறிகள் கொண்டவர்கள் 48 மணி நேரத்திற்கு மருத்துவ கண்காணிப்பில் வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், 5 அல்லது 5 வயதுக்குட்பட்ட பச்சிளம் குழந்தைகள், தீவிரமான சுவாச பிரச்சனை கொண்டவர்கள், நீரிழிவு மற்றும் உடல் பருமன் கொண்டவர்கள் என எளிதில் நோய்த்தொற்றுக்கு ஆளாகக்கூடிய நபர்களுக்கு அறிகுறிகள் கண்டறிந்தால் உடனடியாக மருத்துவ சிகிச்சை வழங்க வேண்டும் என்றும் ஆசெல்டமிவிர் மற்றும் தேவைப்படும் மருந்துகளை வழங்க வேண்டுமென்றும் உத்தரவிட்டுள்ளார்.