தமிழகத்தில் மொத்தம் 6.18 கோடி வாக்காளர்கள் உள்ளனர் - தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
|தமிழகத்தில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர்.
சென்னை,
நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் உள்ள குழப்பங்கள், குறைகளை சரி செய்யும் நோக்கில், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைப்பு பணி கடந்த ஆகஸ்டு 1-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. தமிழகத்தில் மொத்தம் 6 கோடியே 21 லட்சத்து 72 ஆயிரத்து 922 வாக்காளர்கள் உள்ளனர்.
இவர்களில் 3.15 கோடி பேர் வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார் எண்ணை இணைத்து உள்ளனர். ஆதார் இணைப்பு திட்டத்தை நிறைவு செய்யவும், புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு, நீக்கம் ஆகிய பணிகளை மேற்கொள்ள இம்மாதம் சிறப்பு முகாம்களை நடத்த தேர்தல் கமிஷன் முடிவெடுத்து உள்ளது.
இது தொடர்பாக அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் (மாவட்ட தேர்தல் அதிகாரிகள்) தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கடிதம் எழுதியுள்ளார். விழிப்புணர்வு பேரணி துணை மற்றும் ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணி கடந்த மாதம் 25-ந் தேதி தொடங்கி, கடந்த 7-ந் தேதியோடு நிறைவடைந்தது.
ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் தமிழகத்தில் இன்று அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகங்களிலும் வெளியிடப்படுகிறது. இந்நிலையில், ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியலை தமிழக தலைமை தேர்தல் ஆதிகாரி சத்யபிரத சாகு வெளியிட்டார்.
இந்தப் பட்டியல் படி தமிழகத்தில் 6.18 கோடி வாக்காளர்கள் உள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல் தெரிவித்துள்ளார். ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியலை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் வெளியிடுவார்கள் என சத்யபிரதா சாகு கூறியுள்ளார்.
தமிழகத்தின் மொத்த வாக்களர்கள் 6,18,26,182. இதில் ஆண்கள் 3,03,95,௧௦௩ பேர், பெண்கள் 3,14,23,௩௨௧ பேர், மூன்றாம் பாலினத்தவர் 7 ,758 பேர். தமிழகத்தை பொறுத்தவரை சோழிங்கநல்லூர் தொகுதியில் அதிகமாக 6.66.லட்சம் வாக்காளர்களும், துறைமுகம் தொகுதியில் குறைந்த பட்சமாக 1.72 லட்சம் வாக்காளர்களும் உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.