தமிழக அரசின் கவர்னர் உரை இலக்கற்றது : ராமதாஸ் அறிக்கை
|காலியாக உள்ள அரசு பணியிடங்களை நிரப்புவது குறித்து கவர்னர் உரையில் எந்த அறிவிப்பும் இடம் பெறாதது ஏமாற்றமும், வருத்தமும் அளிக்கிறது என்று ராமதாஸ் அறிக்கையில் கூறியுள்ளார்.
சென்னை,
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று ஆளுனரின் பெயரால் படிக்கப்பட்ட உரையில் தமிழ்நாட்டுக்கு பயன் அளிக்கும் வகையில் எந்தத் திட்டமும் இடம்பெறவில்லை. தமிழ்நாடு அரசு அடுத்த ஓராண்டுக்கு எந்த திசையில் பயணிக்கப்போகிறது என்பதற்கான எந்த அறிகுறியும் ஆளுனர் உரையில் இல்லாதது வருத்தமளிக்கிறது.
2024-ம் ஆண்டிற்கான முதலாவது சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. மரபுகளின்படி ஆளுனர் ஆர்.என்.இரவி அவரது உரையை படித்து கூட்டத் தொடரை தொடங்கி வைத்தார். ஆளுனரின் உரையில் குறிப்பிட்டு சொல்லும்படி எந்தத் திட்டமும் இல்லை. 2021-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்த வேண்டும் என்று இந்தியப் பிரதமரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டிருப்பதாக ஆளுனர் உரையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
2021-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி கணக்கெடுப்பாக நடத்த வேண்டும் என்று பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த அகடோபர் மாதமே கடிதம் எழுதியிருந்தார். அப்போதே அதை பா.ம.க. கடுமையாக விமர்சித்தது. சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை மாநில அரசே நடத்த அதிகாரம் இருக்கும் போது, அதற்காக மத்திய அரசை அணுகத் தேவையில்லை என்றும், சமூக நீதியை காக்கும் விஷயத்தில் பொறுப்பைத் தட்டிக்கழிக்கும் செயல் என்றும் நான் குற்றஞ்சாட்டியிருந்தேன்.
அதைத் தொடர்ந்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை நானே நேரில் சந்தித்து, சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த மாநில அரசுக்கு உள்ள அதிகாரங்கள் குறித்தும், அவ்வாறு செய்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் விரிவாக விளக்கினேன். ஆனால், அதன்பிறகும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்ற மத்திய அரசை வலியுறுத்துவதாக தமிழக அரசு மீண்டும், மீண்டும் கூறுவது சமூகநீதியைக் காப்பதில் தமிழக அரசுக்கு அக்கறையும் இல்லை; தெளிவும் இல்லை என்பதையே காட்டுகிறது. இனியாவது தமிழக அரசு தெளிவு பெற்று சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.
தமிழ்நாட்டில் ஒரு கோடிக்கும் கூடுதலான இளைஞர்கள் படித்த படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காமல் தவித்து வருகின்றனர், தமிழக அரசுத்துறைகளில் 5 லட்சத்திற்கும் கூடுதலான பணியிடங்கள் காலியாக உள்ளன. இரண்டுக்கும் தீர்வு காணும் வகையில் அரசுத்துறைகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப வேண்டும் என்ற குரல் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது. ஆனால், காலியாக உள்ள அரசு பணியிடங்களை நிரப்புவது குறித்து ஆளுனர் உரையில் எந்த அறிவிப்பும் இடம் பெறாதது ஏமாற்றமும், வருத்தமும் அளிக்கிறது.
பொதுவாக ஆளுனர் உரை என்பது ஒரு மாநில அரசு அடுத்து வரும் ஓராண்டில் என்னென்ன திட்டங்களை செயல்படுத்தப் போகிறது என்பது குறித்த முன்னறிவிப்பு ஆவணம் ஆகும். தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்; புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும்; தனியார் நிறுவன வேலைவாய்ப்புகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு 80% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட விவகாரங்களில் தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என்ன? என்பதை அறிந்து கொள்ள மக்கள் ஆர்வமாக உள்ளனர். ஆனால், அவை குறித்தும், புதிய திட்டங்கள் குறித்தும் ஆளுனர் பெயரில் படிக்கப்பட்ட உரையில் எந்த அறிவிப்பும் வெளியிடப்படாதது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது.
ஆளுனர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதிலளித்து பேசும் போதாவது சமூகநீதி, வேலைவாய்ப்பு, பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர் நலன் தொடர்பான மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.