< Back
மாநில செய்திகள்
கவர்னர் மாளிகை வட்டார தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை; சட்டசபையில் நடந்தது என்ன? தமிழக அரசு விளக்கம்
மாநில செய்திகள்

கவர்னர் மாளிகை வட்டார தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை; சட்டசபையில் நடந்தது என்ன? தமிழக அரசு விளக்கம்

தினத்தந்தி
|
10 Jan 2023 11:44 PM IST

சட்டசபையில் நடந்தது குறித்து தமிழக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு விளக்கம்

தமிழக அரசு தயாரித்து கொடுத்த சட்டசபை உரையில் கவர்னர் சில பகுதிகளை தவிர்த்தது? ஏன் என்பது குறித்து 6 அம்சங்களை சுட்டிக்காட்டி கவர்னர் மாளிகை வட்டாரம் சார்பில் முன்தினம் தகவல் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் உண்மையில் நடந்தது என்ன? என்பது குறித்து தமிழக அரசு தரப்பில் நேற்று இரவு 4 பக்க தகவல் வெளியிடப்பட்டது. அதன் விவரம் வருமாறு:-

சாதனைகள்

அரசியலமைப்பு சட்டத்தின்படி கவர்னர் உரை என்பது சட்டவிதி 176-ன் கீழ் ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத்தில் நிகழ்த்தப்படும் ஒன்றாகும். இந்த உரை மாநில அரசின் கொள்கைகளையும், கோட்பாடுகளையும், திட்டங்களையும், சாதனைகளையும் எடுத்துரைப்பது ஆகும். இந்த உரை மீது கவர்னர் உரைக்குப்பின், அதில் தெரிவிக்கப்பட்டு உள்ள அரசின் கருத்துகள் மீது தீவிர விவாதங்கள் நடைபெறும். அனைத்துக்கட்சி தரப்பினரும், கவர்னர் உரையின் மீது தங்களது கருத்துகளை தெரிவித்து விவாதிப்பார்கள். எதிர்க்கட்சி தலைவரும், அவரது உரையை இக்கூட்டத்தில் நிகழ்த்துவார். அதன்பிறகு, முதல்-அமைச்சரும் அவரது பதில் உரையை நிகழ்த்துவார்.

வரிகள் நீக்கம் இல்லை

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி அரசு தயாரிக்கும் இந்த உரையை கவர்னர் வாசிக்க வேண்டும் என்பதே மரபு. இந்த உரையில் கவர்னரின் தனிப்பட்ட கருத்துக்களுக்கோ, ஆட்சேபனைகளுக்கோ எவ்வித இடமும் இல்லை. மேலும், இந்த உரை அவரது தனிப்பட்ட உரையும் அல்ல. அரசின் உரையே ஆகும். இந்த நடைமுறையை தொடர்ந்து பல கவர்னர்கள் தமிழ்நாட்டின் சட்டசபையில் கடைபிடித்து வந்துள்ளனர்.

'வரப்புயர நீர் உயரும். நீர் உயர நெல் உயரும்…'' என்கிற அவ்வையாரின் வரிகளையும், பாரதியாரின் ''வாழிய செந்தமிழ், வாழ்க நற்றமிழர், வாழிய பாரத மணித்திருநாடு'' என்கிற வரிகளும் நீக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அரசு தயாரித்த கவர்னர் உரையில் ''வரப்புயர நீர்உயரும். நீர் உயர நெல் உயரும்...'' என்கிற வரிகள் சேர்க்கப்படவில்லை, அவற்றை சேர்க்க வேண்டும் என்று கவர்னர் அலுவலகத்தில் இருந்து எந்தவிதமான கோரிக்கைகளும் பெறப்படவில்லை. ஆதலால் இவை நீக்கப்பட்டு உள்ளன என்று கூறுவது சரியல்ல.

''வாழிய செந்தமிழ், வாழ்க நற்றமிழர், வாழிய பாரத மணித்திருநாடு'' என்கிற பாரதியாரின் கவிதை வரிகளை பொருத்தவரை அரசு தயாரித்த உரையில் சேர்க்கப்பட்டு உள்ளன. ஆதலால் இவை நீக்கப்பட்டு உள்ளது என்று சொல்வது சரியன்று.

கவர்னர் தெரிவித்த புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துகள், அச்சிடப்பட்ட உரையின் பத்தி 1 மற்றும் பத்தி 67-ல் இடம் பெற்றிருந்தன. எனவே, அவை நீக்கப்பட்டன என்று கூறுவது சரியன்று.

தரவுகளின் அடிப்படையில்...

மேலும், கவர்னர், அரசு தயாரித்த உரையில் ஆட்சேபனைக்குரிய பகுதிகளும், அரசு தன்னைத் தானே புகழ்ந்துகொள்ளும் பகுதிகளும் இருப்பதால், சில பத்திகளை வாசிக்கவில்லை என்று கூறப்பட்டது. ஆனால் பத்தி 2-ல் அண்மையில், பிரதமரின் பொருளாதார ஆலோசனைக்குழு வெளியிட்டுள்ள சமூகவளர்ச்சி குறியீட்டு அறிக்கையில் 63.3 புள்ளிகளை பெற்று, இந்தியாவின் பெரிய மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடம் பெற்றுள்ளது என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

பத்தி 35-ல் ரூ.28 ஆயிரத்து 232 கோடி அன்னிய முதலீட்டை தமிழ்நாடு ஈர்த்துள்ளது என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இது, ஒரு தரவின் அடிப்படையிலான உண்மை தகவலாகும். இது, எந்த பிற மாநிலங்களையும் ஒப்பிட்டு குறிப்பிடப்படவில்லை. இவ்வாறான உண்மை நிகழ்வுகளையே கவர்னர் தனது உரையில் வாசிக்கவில்லை. தரவுகளின் அடிப்படையிலேயே தயாரிக்கப்பட்ட உரையின் மேற்சொன்ன பகுதிகளை கவர்னர் வாசிக்கவில்லை.

வரைவு கவர்னர் உரை அவரது ஒப்புதலுக்காக ஜனவரி 6-ந்தேதி காலை சுமார் 11.30 மணிக்கு அவரது அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டது. இதில், கவர்னர் அலுவலகத்தின் ஒப்புதலுடன் சிறிய எழுத்துப்பிழை திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, ஜனவரி 6-ந்தேதி மாலை சுமார் 4.30 மணிக்கு மீண்டும் திரும்ப அனுப்பப்பட்டது. இதன்பின், கவர்னர் அலுவலகத்தில் இருந்து, சில திருத்தங்களை மேற்கொள்ளுமாறு கூறினர். கவர்னர் அலுவலகத்துடன் கலந்தாலோசித்து அத்திருத்தங்களை மேற்கொண்டு, இறுதியாக ஒரு உரை ஜனவரி 7-ந்தேதி இரவு சுமார் 8 மணிக்கு அனுப்பப்பட்டது.

வதந்தி

ஜனவரி 8-ந்தேதி, காலை சுமார் 11.30 மணியளவில் கவர்னர் ஒப்புதலுடன் கோப்பு அரசுக்கு திருப்பி அனுப்பப்பட்டது. கவர்னர் சில பத்திகளை நீக்கக்கூறுமாறு கோரியபோது, உரை அச்சிற்கு சென்றுவிட்டது என்று கூறியதும், எனவே தாங்கள் உரையை வாசிக்கும்போது, அவற்றை தவிர்த்து வாசியுங்கள் என்ற வதந்தி தவறாக பரப்பப்பட்டு வருகிறது. இது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. அவ்வாறு எந்த ஒரு நிகழ்வும் நடைபெறவில்லை என்பதே உண்மை.

ஒவ்வொரு ஆண்டும் கவர்னர் உரையாற்றிய நாளின் அதிகாலையிலேயே (சுமார் 12.30 மணியளவில்) உரை அச்சிடுவதற்கு அனுப்பப்படும். இதுதான் கடைப்பிடிக்கப்படும் மரபு. இவ்வாண்டும் அவ்வாறே கடைப்பிடிக்கப்பட்டது. 8-ந்தேதி காலை சுமார் 11.30 மணியளவில் கவர்னரின் ஒப்புதல் பெறப்பட்ட கோப்பு பெறப்பட்டது. ஆனால், அரசின் சார்பில் கவர்னர் உரை 9-ந்தேதி அதிகாலை சுமார் 12.30 மணியளவிலேயே அச்சகத்திற்கு அனுப்பப்பட்டது.

எனவே, உண்மைநிலை இவ்வாறு இருக்கும் நிலையில், தவறான தகவல்களையும், வதந்திகளையும், பத்திரிகைகளிலும், சமூகவலைதளங்களிலும் பரப்புவது சரியானதல்ல.

இவ்வாறு தமிழக அரசு தரப்பில் தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் செய்திகள்