தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி டிஸ்மிஸ் செய்யப்படவேண்டும் - கி.வீரமணி வலியுறுத்தல்
|தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி டிஸ்மிஸ் செய்யப்படவேண்டும் என்று கி.வீரமணி வலியுறுத்தி உள்ளார்.
சென்னை,
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று (29.6.2023) ஓர் அரசமைப்புச் சட்ட விரோத ஆணையை சிறிதும் முன்யோசனையின்றி 'ஆத்திரக்காரருக்கு அறிவு மட்டு' என்ற பழமொழிக்கொப்ப, அமைச்சர் செந்தில்பாலாஜியை "டிஸ்மிஸ்" செய்வதாக வெளியிட்டார். அதே ஆணையை 5 மணிநேரத்தில் திரும்பப் பெற்றார். இது அவர் எப்படி தனது பதவி அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்துள்ளார் என்பதற்கான அதிகாரப்பூர்வ ஆவண சாட்சியம் ஆகும்.
இப்படி அரசமைப்புச் சட்ட விரோத நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு, தி.மு.க. ஆட்சியின்மீது வன்மத்துடன் நடந்துகொண்டு வரும் இந்த கவர்னர் தனது பதவியை இராஜினாமா செய்து வெளியேறவேண்டும்.
ஜனநாயகத் தத்துவப்படி இந்த கவர்னரை 'டிஸ்மிஸ்' செய்ய முன்வரவேண்டும் ஜனாதிபதி. அவரை கவர்னராக அனுப்பியவர்களும், இதற்கான தார்மீகப் பொறுப்பேற்க முன்வரவேண்டும். 13 மசோதாக்களை நிறுத்தி வைத்தும், நாளும் ஆளும் கட்சியின் கொள்கைகளை எதிர்த்தும் ஒரு போட்டி அரசு நடத்துவது குறித்து அனைத்துக் கட்சிகளும், மக்களும் திரண்டு, "கவர்னரை டிஸ்மிஸ் செய்" என்ற ஒற்றைக் கோரிக்கையை - பிரச்சாரத்தை எங்கெங்கும் அடைமழையாகப் பொழிய வைக்கவேண்டியது, ஜனநாயகக் காப்புக் கடமையாகும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.