< Back
மாநில செய்திகள்
மத்திய மந்திரி அமித்ஷாவுடன் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி சந்திப்பு...!
மாநில செய்திகள்

மத்திய மந்திரி அமித்ஷாவுடன் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி சந்திப்பு...!

தினத்தந்தி
|
8 July 2023 12:33 PM IST

தமிழக கவர்னர் ஆஎ.என்.ரவி 7 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார்.

டெல்லி,

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், கவர்னர் ஆர்.என்.ரவிக்கும் கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்குவதாக முதல்-அமைச்சருக்கு, கவர்னர் கடிதம் எழுதினார்.

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தலையிட்டு, இவ்விவகாரத்தில் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரிடம் ஆலோசனை நடத்துமாறு கவர்னருக்கு அறிவுரை வழங்கியது. இதையடுத்து, தனது கடிதத்தை நிறுத்தி வைப்பதாக முதல்-அமைச்சருக்கு கவர்னர் மீண்டும் கடிதம் எழுதினார்.

இதனை தொடர்ந்து ஊழல் வழக்குகளில் சிக்கியுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது நீதிமன்ற விசாரணை தொடங்க அனுமதி அளிக்குமாறும், நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு ஒப்புதல்அளிக்கும்படியும் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, கவர்னருக்கு கடிதம் எழுதினார். அந்த கடிதத்துக்கு கவர்னர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.

இதற்கிடையே, 'கவர்னர் என்பவர் அரசியல்வாதி இல்லை. கவர்னர் அரசியல் பேசக்கூடாது. தனது கடமையை மட்டும் செய்ய வேண்டும்' என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார்.

இந்த பரபரப்பான அரசியல் சூழலில், தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி டெல்லி சென்றடைந்தார். நேற்று மாலை சென்னையில் இருந்து புறப்பட்ட ஆர்.என்.ரவி இன்று டெல்லி சென்றடைந்தார். அவர் ஒரு வாரம் டெல்லியில் தங்கியிருந்து ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை டெல்லியில் சந்தித்துள்ளார். பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் கவர்னர் ஆர்.என்.ரவி அமித்ஷாவை சந்தித்துள்ளது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்