< Back
மாநில செய்திகள்
உள்நாட்டு உற்பத்தியிலும், ஏற்றுமதியிலும் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் முன்னேற தமிழ்நாடு அரசு துணை நிற்கும் - அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேச்சு
சென்னை
மாநில செய்திகள்

உள்நாட்டு உற்பத்தியிலும், ஏற்றுமதியிலும் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் முன்னேற தமிழ்நாடு அரசு துணை நிற்கும் - அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேச்சு

தினத்தந்தி
|
17 March 2023 2:21 PM IST

சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் உள்நாட்டு உற்பத்தியிலும், ஏற்றுமதியிலும் முன்னேறுவதற்கு தமிழ்நாடு அரசு துணை நிற்கும் என்று அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார்.

பொறியியல் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் சார்பாக 10-வது சர்வதேச என்ஜினீயரிங் ஆதார கண்காட்சி சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நேற்று நடந்தது. இந்த கண்காட்சியை, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் தா.மோ.அன்பரசன் பேசியபோது:-

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் 3-ல் 1 பங்கு உற்பத்தி செய்கின்றன. இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யும் பொருட்களில் 45 சதவீதம் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் ஆகும்.

கடந்த ஆண்டு இந்தியா 112 பில்லியன் அமெரிக்க டாலருக்கு பொறியியல் பொருட்களை ஏற்றுமதி செய்துள்ளது. இதில் தமிழ்நாட்டின் பங்களிப்பு 16 பில்லியன் டாலர். இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 2-ம் இடம் வகிக்கும் தமிழ்நாடு, ஏற்றுமதியில் இந்தியாவிலேயே 3-வது பெரிய மாநிலமாக திகழ்கிறது.

தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்று 2 ஆண்டுகளில், 3 வகையான சுய வேலைவாய்ப்பு திட்டங்களின் கீழ் ரூ.683 கோடி மானியத்துடன் ரூ.2 ஆயிரத்து 756 கோடி வங்கிக்கடன் உதவி வழங்கப்பட்டு 19 ஆயிரத்து 332 இளைஞர்கள் புதிய தொழில் முனைவோர்களாக உருவாக்கப்பட்டு உள்ளனர். சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை ஊக்கப்படுத்தும் விதமாக 8 ஆயிரத்து 150 நிறுவனங்களுக்கு ரூ.519 கோடி மானியமாக வழங்கப்பட்டுள்ளது. 537.72 ஏக்கர் பரப்பளவில் 8 புதிய தொழிற்பேட்டைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

2030-ல் 1 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கினை அடைய, சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் உள்நாட்டு உற்பத்தியிலும், ஏற்றுமதியிலும் முன்னேற வேண்டும். அதற்கு முதல்-அமைச்சர் தலைமையிலான தமிழ்நாடு அரசு என்றும் துணை நிற்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில், பொறியியல் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் தலைவர் அருண்குமார் கரோடியா, வர்த்தக மற்றும் கூடுதல் செயலாளர் சத்தியா சீனிவாசன், தமிழ்நாடு அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தரத் துறை அரசு செயலாளர் அருண் ராய், தொழில் வணிகக் கூடுதல் ஆணையர் கிரேஸ் பச்சாவ், பொறியியல் ஏற்றுமதி மேம்பாட்ட கவுன்சில் முதன்மை துணைத் தலைவர் பங்கஜ் ஜாதா, துணைத்தலைவர் ஆகாஷ் ஷா, தொழிலதிபர்கள், தொழில் முனைவோர்கள், ஏற்றமதியாளர்கள், மத்திய மற்றும் மாநில அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்