முதலீட்டாளர்களுக்கு உதவி செய்ய தமிழ்நாடு அரசு காத்திருக்கிறது: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
|ஸ்பெயின் நிறுவனங்களும் தமிழ்நாட்டை நோக்கி வர வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
சென்னை,
தமிழகத்துக்கு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 10 நாள் சுற்றுப்பயணமாக ஸ்பெயின் நாட்டுக்கு சென்றுள்ளார். அங்கு நடக்கும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொள்ளும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈர்க்கும் முயற்சியில் ஈடுபடவுள்ளார்.
இந்தநிலையில் ஸ்பெயின் தலைநகர் மேட்ரிட்டில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலீட்டாளர்களை இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார். இந்த சந்திப்பில் ரொகா, எடிபோன், சிஐஇ ஆகிய நிறுவனங்களை சார்ந்த முதலீட்டாளர்கள் மற்றும் தொழிலதிபர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.
இந்த நிலையில் இந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். இதில், மிகப் பெரும் தொழில் நிறுவனங்களான, ஹுண்டாய், டாடா நிறுவனங்கள், தமிழ்நாட்டில் தங்கள் முதலீடுகளை பன்மடங்கு அதிகரித்துள்ளன. தமிழ்நாட்டில் 130க்கும் மேற்பட்ட பார்ச்சூன் 500 நிறுவனங்கள் தமது திட்டங்களை நிறுவியுள்ளன. இது தமிழ்நாட்டில் முதலீட்டுக்கான சிறந்த சூழல் அமைந்துள்ளதற்கு சான்று ஆகும். இதன் தொடர்ச்சியாக ஸ்பெயின் நிறுவனங்களும் தமிழ்நாட்டை நோக்கி வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
மின்சார வாகனங்கள், மின்னணுக் கருவிகள், தோல் பொருட்கள், தோல் அல்லாத காலணிகள், ஆடைகள் போன்றவற்றின் உற்பத்தியிலும், தகவல் தொழில்நுட்பம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, உயர் மருத்துவ சேவைகள் போன்ற பல்வேறு துறைகளிலும் இந்தியாவின் முன்னணி மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்ந்து வருகின்றது.
மேலும், தமிழ்நாட்டில் தொழில்களைத் தொடங்க வரும் முதலீட்டாளர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்வதற்கு தமிழ்நாடு அரசு காத்திருக்கிறது. பல்வேறு தொழில்களை மேற்கொள்ள உகந்த சூழலையும் திறன்மிக்க மனிதவளத்தையும் உறுதி செய்துள்ளோம். பல்வேறு தொழில் கொள்கைளின் கீழ் உயர் சலுகைகள் அளிக்க உள்ளோம், என்று பேசினார்.