அபாயகரமான 6 பூச்சிக் கொல்லிகளுக்கு தமிழக அரசு தற்காலிக தடை
|அபாயகரமான 6 பூச்சிக் கொல்லிகளுக்கு தற்காலிகமாக தடை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
சென்னை,
விவசாயம் மற்றும் விவசாயிகளின் நலன் காக்க அபாயகரமான 6 பூச்சிக் கொல்லிகளுக்கு தமிழக அரசு தற்காலிக தடை விதித்துள்ளது. தமிழகத்தின் பல இடங்களில் எலி கொல்லியாக பயன்படுத்தப்படும் 'பாஸ்பரஸ்' தற்கொலைக்கு முக்கிய காரணமாக உள்ளது எனவும், இதற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் வேளாண் இயக்குனர் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்தார்.
இதனை கவனமாக பரிசீலனை செய்த தமிழக அரசு, அபாயகரமான 6 பூச்சிக் கொல்லிகளுக்கு தற்காலிகமாக தடை விதித்து அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி மோனோக்ரோடோபோஸ் (Monocrothophos), ப்ரோஃபினோபோஸ் (Profenophos), அசபேட்(Acephate), ப்ரோஃபினோபோஸ் சைபர்மெத்ரின் (Profenophos Cypermethrin), குளோர் பைரிபோஸ் சைபர்மெத்ரின்(Chlorpyriphos Cypermethrin), குளோர்பைரிபோஸ் (Chlorpyriphos) ஆகிய 6 பூச்சிக்கொல்லிகளுக்கு, 60 நாட்கள் தற்காலிக தடை விதிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அரசிதழில் அரசாணை வெளியிட்டுள்ளது.
மேலும் மஞ்சள் பாஸ்பரஸ் எனும் எலிக்கொல்லி மருந்துக்கும் நிரந்தர தடை விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வகை மருந்துகள் முறையாக பதிவு செய்யப்படாத பூச்சிக்கொல்லி என்றும், பெட்டிக்கடைகள் முதல் சூப்பர் மார்க்கெட் வரை அனைத்து இடங்களிலும் கிடைப்பதாகவும் வேளாண் இயக்குனரகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.