திருச்சி
தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் ஆதரவு அளிக்க முடிவு
|தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் ஆதரவு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருச்சியில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மாநில தலைவர் சரவணன் முன்னிலை வகித்தார். மாநில செயல் தலைவர் பழனிபாரதி வரவேற்று பேசினார். இதில் மாநில பொதுச் செயலாளர் கோதண்டம், பொருளாளர் ஜெய்கணேஷ், செயலாளர் முருகானந்தம் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினா். தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் சார்பில் நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வரும் பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், சுழற்சி முறை பணியிட மாற்றம், பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்தல் ஆகியவை குறித்து நடப்பு சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே முதல்-அமைச்சர் அறிவிக்க வேண்டும். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக்கில் உள்ள பல்வேறு தொழிற் சங்கங்கள் இணைந்து கூட்டு நடவடிக்கை குழு சார்பில் வருகிற 11-ந் தேதி மண்டல அளவில் திருச்சி, மதுரை, கோவை, சேலம் மற்றும் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் தார்மீக ஆதரவை அளிப்பது. அழைப்பு விடுக்கப்பட்டால் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வது என்று கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.