< Back
மாநில செய்திகள்
புதிய தொற்றுநோய்ப் பரவல் அதிகமாகாமல் இருக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஜி.கே.வாசன்
மாநில செய்திகள்

புதிய தொற்றுநோய்ப் பரவல் அதிகமாகாமல் இருக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஜி.கே.வாசன்

தினத்தந்தி
|
16 Dec 2023 12:29 PM IST

புதிய தொற்றுநோய்ப் பரவல் அதிகமாகாமல் இருக்க மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

சென்னை,

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:-

தமிழக அரசு, கொரோனா உள்ளிட்ட புதிய தொற்றுநோய்ப் பரவலில் இருந்து மாநில மக்களைப் பாதுகாக்க வேண்டும். தமிழகத்தில் கொரோனா தொற்றுநோய்ப் பரவல் இருக்கிறது. இதனைக் கட்டுப்படுத்தும் விதமான ஆரம்பக் கட்ட நடவடிக்கைகளில் தமிழக அரசு ஈடுபடுவது மட்டும் போதுமானதல்ல. காரணம் தமிழகத்தில் மட்டுமல்ல அண்டை மாநிலமான கேரளாவில் புதிய வைரஸ் தொற்றுநோய்ப் பரவல் நாளுக்கு நாள் அதிகமாகி ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது மிகவும் கவனிக்கப்பட வேண்டியது. அதாவது கடந்த காலங்களில் கொரோனா தொற்றுநோயானது அண்டை மாநிலங்களில் இருந்தும் தமிழ்நாட்டிற்கு பரவியது.

எனவே முதலில் கேரளா போன்ற அண்டை மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு வரும் மக்களிடம் மருத்துவப் பரிசோதனை அவசியம் மேற்கொள்ளப்பட வேண்டும். எக்காரணத்திற்காகவும் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் சமரசம், தொய்வு, கால தாமதம் என்ற பேச்சுக்கே இடம் இருக்கக் கூடாது.

ஏற்கனவே கொரோனாவால் ஊரடங்கு, உயிரிழப்பு, பொருளாதார இழப்பு ஏற்பட்டதை அரசும், மக்களும் கவனத்தில் கொண்டு மீண்டும் அது போன்ற ஒரு துயரநிலை ஏற்படக்கூடாது என்பதற்காக ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இந்நிலையில் கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் அடுத்தக் கட்டப் போராட்டத்திற்கு மக்களை தள்ளக்கூடாது என்பதற்காக மருத்துவப் பரிசோதனைகள், பாதுகாப்பு அம்சங்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், விழிப்புணர்வு ஆகியவை எல்லாம் கண்டிப்பாக மேற்கொள்ளப்பட வேண்டும். இதற்கெல்லாம் தமிழக அரசும், அரசு இயந்திரமும் முழு முயற்சியுடன் செயல்பட வேண்டும். மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளித்து பாதுகாக்க வேண்டும். கொரோனா பரவல் தொடராமல் இருக்க தொடர் நடவடிக்கைகள் தேவை.

மிக முக்கியமாக கடந்த கால கொரோனா பாதிப்பை தமிழக அரசு கவனத்தில் கொண்டு, இனிமேலும் தமிழக மக்கள் கொரோனா போன்ற புதிய தொற்றுநோயினால் எவ்வித பாதிப்புக்கும் உட்படக்கூடாது என்பதற்காக கொரோனா உள்ளிட்ட புதிய தொற்றுநோய்ப் பரவல் அதிகமாகாமல் இருக்கவும், மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்