< Back
மாநில செய்திகள்
வரி உயர்வை தமிழக அரசு மறுசீராய்வு செய்ய வேண்டும்-நகராட்சி கூட்டத்தில் தீர்மானம்
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

வரி உயர்வை தமிழக அரசு மறுசீராய்வு செய்ய வேண்டும்-நகராட்சி கூட்டத்தில் தீர்மானம்

தினத்தந்தி
|
29 July 2023 12:24 AM IST

புதுக்கோட்டையில் 20 மடங்கு முதல் 100 மடங்கு வரை வரி உயர்வு செய்யப்பட்டுள்ளது. இதனை தமிழக அரசு மறுசீராய்வு செய்ய வேண்டும் என நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நகராட்சி கூட்டம்

புதுக்கோட்டை நகராட்சியின் சாதாரண கூட்டம் நகர்மன்ற தலைவர் திலகவதி தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு நகராட்சி ஆணையர் சித்ரா மற்றும் துணை தலைவர் லியாகத் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டம் தொடங்கியதும் நகராட்சி தலைவர், துணை தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு மதிப்பூதியம் வழங்கியதற்கு தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து நகர்மன்ற தலைவர் திலகவதி ஒரு தீர்மானம் கொண்டு வந்தார். அதில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை நகராட்சி நிர்வாக இயக்குனர் சுற்றறிக்கையின் படி குறைந்தபட்சம் வரி உயர்வு 25 சதவீதமாகவும் அதிகபட்சம் 100 சதவீதமாகவும் வரி விதிப்பு செய்யலாம் என அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல் அமைவிடம் கட்டுமான தன்மை அடிப்படையில் ஏ, பி, சி மண்டலங்களாக பிரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி புதுக்கோட்டை நகரின் கடைத்தெரு பகுதியாக உள்ள கீழராஜவீதி, வடக்குராஜவீதி, தெற்குராஜவீதி, மேற்குராஜவீதி ஆகிய பகுதிகள் விலை மதிப்பு உள்ள பகுதியாக உள்ளது. மற்றப்பகுதிகள் குடியிருப்பு பகுதிகளாகவும், வளர்ச்சி பின்தங்கிய பகுதியாகவும் உள்ளது. எனவே ஏ.பி.சி மண்டலங்கள் புதுக்கோட்டை நகராட்சியில் முறையாக பிரிக்கப்படவில்லை.

சொத்துவரி...

புதுக்கோட்டை நகரில் மண்டல பகுதிகளை முறையாக நிர்ணயம் செய்யாமலும், அரசு விதிப்படி செய்யாமல் பெரும்பாலான பகுதிகளை 'ஏ' சோனாகவும், சில பகுதிகளை மட்டும் 'பி' சோனாகவும், 'சி' சோனாக ஒரு நகர் மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை நகரில் வரி நிர்ணயம் 20 மடங்கு முதல் 100 மடங்கு வரை உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் புதுக்கோட்டை நகராட்சியில் சுமார் 15 ஆயிரம் வரி விதிப்புக்கு மேலாக 50 மடங்கு மேல் வரி உயர்வு செய்யப்பட்டுள்ளது. புதுக்கோட்டை நகராட்சியில் மட்டும் அரசாணையின் விதிகளை கடைப்பிடிக்காமல் தன்னிச்சையாக வரி உயர்வு செய்யப்பட்டுள்ளது.

இந்த அதிகப்படியாக வரி உயர்வினால் நகர மக்கள் சொத்துவரியினை செலுத்த முடியாமலும் நகராட்சியின் மீது மிகுந்த வெறுப்புடனும், கோபத்துடனும் உள்ளனர். எனவே பழைய வரிவிதிப்பில் 25 சதவீதத்திலிருந்து 100 சதவீதத்திற்கு மிகாமல் அரசு வரி விதிப்பு செய்து புதுக்கோட்டை நகர் மக்களின் விரி செலுத்தும் கஷ்டத்தை நீக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தை தி.மு.க உறுப்பினர் ராஜேஸ்வரி முன்மொழிந்தார். மற்றொரு தி.மு.க உறுப்பினர் வளர்மதி வழிமொழிந்தார். அதை தொடர்ந்து கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசும்போது கூறியதாவது:-

சங்கிலி பறிப்பு

அப்துல் ரகுமான் (அ.தி.மு.க):- வரி உயர்வை மறுசீராய்வு செய்தமைக்கு நன்றி. புதிய பஸ்நிலையம் கட்டப்பட உள்ளது. இதையொட்டி தற்காலிக பஸ் நிலையம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதா?. பஸ் நிலையத்தில் உள்ள கடைகளுக்கு மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதா?, மேலும் கழிவறை வசதிகள் செய்யப்பட்டுள்ளதா? என்று தெரிவிக்க வேண்டும். புதுக்கோட்டையில் தெருநாய், குரங்குகள் தொல்லை அதிகம் உள்ளது. இதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது வார்டில் 22 சந்துகள் உள்ளன. எனவே கூடுதல் துப்புரவு பணியாளர்களை நியமிக்க வேண்டும். தெருவிளக்கு எரியாததால் பெண்களிடம் சங்கிலி பறிப்பு சம்பவங்கள் அதிகளவில் நடக்கிறது.

ராஜா முகமது (காங்கிரஸ்):- தற்போது தனியார் மூலம் குப்பைகள் அள்ளப்படுவதாக தெரிவித்தீர்கள். ஆனால் எனது வார்டில் முறையாக குப்பைகளை அள்ள யாரும் வருவதில்லை. மேலும் குப்பைக்கிடங்கில் அடிக்கடி தீப்பிடித்து எரிகிறது. இதனால் குடியிருப்பு பகுதி புகைமண்டலமாக உள்ளது. இதை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குளங்களை தூர்வார வேண்டும்

பாபு (தி.மு.க):- எனது வார்டில் 3 பூங்காக்கள் உள்ளதாக நகராட்சி வரைபடத்தில் உள்ளது. ஆனால் அது எங்கு உள்ளது என்று தெரியவில்லை. எனவே அந்த பூங்காவிற்காக ஒதுக்கப்பட்ட இடத்தை அளந்து காட்டினால் அதை சுத்தப்படுத்தி பயன் பாட்டிற்கு கொண்டுவரலாம்.

பாண்டி (அ.தி.மு.க):- எனது வார்டில் 2 குளங்கள் உள்ளன. எனவே அதை நகராட்சி கணக்கில் கொண்டுவந்து குளங்களை தூர்வாரி சுத்தம் செய்ய வேண்டும்.

லியாகத் அலி (துணை தலைவர்):- புதுக்கோட்டை நகராட்சியில் 288 ஒப்பந்த ஊழியர்கள் உள்ள இடத்தில் 245 பேர் தான் உள்ளனர். நகராட்சியை 10 டிவிஷன்களாக பிரித்து ஆட்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒரு டிவிஷனுக்கு 4 வார்டுகள் என்ற முறையில் பிரித்து கவுன்சிலர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். 1 லட்சத்து 78 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட புதுக்கோட்டையின் வரி ரூ.30 கோடி வசூலிக்கப்படுகிறது. 5 ஆண்டுகளுக்கு முன்பு தேர்வுநிலை நகராட்சியாக இருந்தது. புதுக்கோட்டை நகராட்சி சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்படாததால் இங்குள்ள 31 அலுவலர்களை எடுத்துவிட்டனர். இதனால் அலுவலர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மேலும் போதுமான பணியாளர்கள் இல்லை. இதனால் தான் இந்த நிலை. விரைவில் புதுக்கோட்டை மாநகராட்சியாக அறிவிக்கப்பட உள்ளது. அப்போது நமது அனைத்து பிரச்சினைகளும் தீர்க்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்