< Back
மாநில செய்திகள்
தமிழ்நாடு அரசு மதுவிலக்கை நோக்கி நகர வேண்டும்.. -விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தல்!
மாநில செய்திகள்

"தமிழ்நாடு அரசு மதுவிலக்கை நோக்கி நகர வேண்டும்.." -விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தல்!

தினத்தந்தி
|
16 May 2023 12:29 PM IST

மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவது குறித்து முதல் அமைச்சர் தீவிரமாக ஆராயவேண்டுமென விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்

மதுரை,

மதுரையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது;

நச்சு சாராயத்தை அருந்தி 10க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது. வேதனையை தருகிறது. தமிழக முதல் அமைச்சர், பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறியதுடன், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி அளித்திருப்பது ஆறுதலை தருகிறது.

கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டவர்களை கைது செய்திருந்தாலும், தமிழக அரசு அதை தாண்டி சிந்திக்க வேண்டிய தேவை எழுந்திருப்பதாக விசிக கருதுகிறது.

படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவோம் என திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. எனவே, அரசு மதுக்கடைகளை சட்டப்பூர்வமான அனுமதித்த நிலையிலும் கூட, கள்ளச்சாராய புழக்கத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.

மதுவிலக்கை அமல்படுத்தினால் கள்ளச்சாராயம் பெருகும் என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது. மதுக்கடைகளை அனுமதித்தாலும், கள்ளச்சாராயம் புழங்குகிறது.

எனவே கள்ளச்சாராய நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதும், மதுவிலக்கை அமல்படுத்துவதும் சம காலத்தின் நிகழ வேண்டும். கள்ளச்சாராய விற்பனையை கட்டுப்படுத்தவே அரசு மது விற்பனையை அனுமதிக்கிறது என்ற கருத்தில் நம்பிக்கை இல்லை. அது ஏற்புடையதும் இல்லை. அதனால் பயனும் இல்லை.

எனவே முதல் அமைச்சர் மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவது குறித்து தீவிரமாக ஆராயவேண்டும். படிப்படியாக நடைமுறைப்படுத்துவதற்குரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். மது அருந்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

திமுக அரசு பெரியார், அண்ணா, கலைஞர் வழியில் சமூக நீதியை முன்னிறுத்தி ஆட்சியை நடத்தி வருகிறது என்கிற அடிப்படையில் விசிக இந்த கூட்டணியை ஆதரிக்கிறது. வலுப்படுத்துவதில் உறுதியாக உள்ளது. அதிகாரிகள் செய்த குளறுபடிகளால், ஒட்டுமொத்தமாக திமுக அரசை நாம் குறைத்து மதிப்பிட முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்