< Back
மாநில செய்திகள்
நீர் மேலாண்மைக்கு தமிழக அரசு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்-அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
திருச்சி
மாநில செய்திகள்

நீர் மேலாண்மைக்கு தமிழக அரசு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்-அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

தினத்தந்தி
|
13 July 2023 12:15 AM IST

தமிழகத்தில் விவசாய நிலங்கள் சுருங்கி வருவதால் உணவுக்கு அண்டை மாநிலங்களை நாடுகின்ற சூழ்நிலை வரும். எனவே நீர் மேலாண்மைக்கு தமிழக அரசு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.

நீர் மேலாண்மை

திருச்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருகை தந்த பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் திருச்சி விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

விவசாய பயன்பாட்டில் இருந்த 4 லட்சத்து 42 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் மற்ற பயன்பாட்டிற்கான நிலமாக மாற்றப்பட்டுள்ளது. தமிழகத்தில் 48 சதவீதம் விவசாய நிலங்கள் தற்போது 38 சதவீதமாக சுருங்கி விட்டது. இதற்கு கடந்த 50 ஆண்டுகளில் தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகள் பாசன வசதிக்கு எந்த திட்டமும் கொண்டு வராததே காரணம். மற்ற மாநிலங்களில் நீர்பாசன திட்டத்திற்கு பல ேகாடி ரூபாய் ஒதுக்கீடு செய்து இருக்கிறார்கள். தமிழகத்தில் மழை பொய்த்து போனால் உணவுக்கு அண்டை மாநிலங்களை நாடுகின்ற சூழ்நிலை வரும். எனவே நீர் மேலாண்மைக்கு தமிழக அரசு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

சட்டம்-ஒழுங்கு பிரச்சினை

கர்நாடகா சட்டபேரவையில் அணை கட்ட போகிறோம் என கூறி உள்ளனர். இரண்டு மாநில நல்லுறவை கெடுக்கும் வகையில் கர்நாடக முதல்-மந்திரியும், துணை முதல்-மந்திரியும் தூண்டி வருகின்றனர். இது சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தும். இதில் கர்நாடகாவில் உள்ள தமிழர்களுக்கு தான் பாதிப்பு ஏற்படும். நீர் பங்கீட்டில் நடுவர் மன்ற தீர்ப்பை கர்நாடக அரசு கடைபிடிக்க வேண்டும்.

காவிரியில் தடுப்பணை கட்ட வேண்டும் என்று கேட்கிறோம். ஆனால் எங்களுக்கு கிடைத்தது மணல் குவாரிகள் தான். கடந்த ஆண்டு 620 டி.எம்.சி. நீர் கடலில் வீணாக கலந்துள்ளது. எனவே காவிரியின் குறுக்கே தடுப்பணை கட்டினால் ஒவ்வொரு டி.எம்.சி. நீரையும் சேமிக்கலாம். ஆனால் கொள்ளிடத்தில் இப்போது 10 மணல் குவாரிகள் உள்ளது.

கவர்னர் அரசியல் பேசக்கூடாது

தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள மதுவிலக்கு துறை அமைச்சர் முத்துசாமி அந்த துறையை புரிந்து கொள்ள வேண்டும். ஆனால் அவர் பேசுவதை பார்த்தால் பயமாக உள்ளது. 90 மில்லியில் மது விற்பனை, சந்துக்கடை விற்பனை என மது விற்பனை துறையாக தமிழக மதுவிலக்கு துறை செயல்பட்டு வருகிறது.

காய்கறி விலை உயர்வால் இடைத்தரகர்களுக்கு தான் லாபம் கிடைக்கிறது. தற்போது தக்காளி கிலோ ரூ.140-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் அதனை சாகுபடி செய்த விவசாயிக்கு கிலோ ரூ.10 முதல் ரூ.15 வரை தான் லாபம் கிடைக்கிறது. திருச்சி மாநகரில் போக்குவரத்து மிகுந்து நெரிசலாக இருக்கிறது. இதற்கு விஞ்ஞான ரீதியில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கவர்னர் அரசியல் பேசக்கூடாது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்-அமைச்சர் கூறுவதை தான் கவர்னர் கேட்க வேண்டும். அதில் குறைகள் இருந்தால் சுட்டிக்காட்டலாமே தவிர வேறு எதுவும் அவர் பேசக்கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்