அனைத்துச்சாதியினரும் அர்ச்சகராகும் வகையில் தமிழக அரசு சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் - சீமான்
|அனைத்துச்சாதியினரும் அர்ச்சகராகும் வகையில் தமிழக அரசு சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.
சென்னை,
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அனைத்துச்சாதியினரும் அர்ச்சகராவதற்கெதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கில், தமிழக அரசின் விதிகள் செல்லுமெனக் கூறியுள்ள உயர் நீதிமன்றம், ஆகம விதிகளை அடிப்படையாகக் கொண்டே அர்ச்சகர்கள் நியமிக்கப்பட வேண்டுமென்றும், ஆகம விதிகள் பின்பற்றப்படும் கோயில்களை கண்டறிய ஐவர் குழு அமைக்கப்பட வேண்டுமென உத்தரவிட்டிருப்பது தேவையற்ற குழப்பத்தை விளைவித்திருக்கிறது.
இத்தீர்ப்பினை மேம்போக்காக நோக்கி அனைத்துச்சாதியினரும் அர்ச்சகராவதற்கு ஆதரவாகக் கிடைத்திருக்கிற தீர்ப்பெனப் பலர் அறியாமல் வரவேற்கின்றனர், ஆகம விதிகளெனும் ஆரியச் சூழ்ச்சியைக் காரணங்காட்டி அதற்கெனத் தனிக்குழு அமைக்க வலியுறுத்தியிருப்பதென்பது மீண்டும் அச்சகர் நியமனத்தில் பழைய நிலைக்கே இழுத்துச்செல்லும் பேராபத்தாகும். அர்ச்சகர் பணிக்கு மட்டுமல்லாது, எந்தவொரு செயல்பாட்டுக்கும் தகுதியாகப் பிறப்பை முன்வைத்து, எவருக்கும் முன்னுரிமை அளிக்கப்படுமேயானால், அது எதன்பொருட்டும் ஏற்க முடியாத பெரும் மோசடித்தனமாகும். தமிழர் மண்ணில், தமிழர்களுக்காக, தமிழர்கள் இணைந்து கட்டிய திருக்கோயில்களில் தமிழர்கள் கருவறைக்குள் நின்று வழிபாடு செய்யும் உரிமையைக் காலங்காலமாக மறுத்து வருவதென்பது தமிழினத்திற்கு இழைக்கப்படும் பெரும் கொடுமையாகும்.
உரிய கல்வித்தகுதியும், முறையான பயிற்சியும் பெற்றவர்கள் எவரும் கோயில்களில் வழிபாடு செய்யலாமெனக் கடந்த அதிமுக அரசின் ஆட்சிக்காலத்தின்போது இந்து சமய அறநிலையத்துறையால் அரசாணை பிறப்பிக்கப்பட்டு, புதிய விதிகள் கொண்டுவரப்பட்டன. அர்ச்சகர்கள் மற்றும் கோயில் ஊழியர்களை நியமனம் செய்யும் அதிகாரமும் இந்து சமய அறநிலையத்துறைக்கு உண்டென இவ்விதிகள் வரையறுக்கின்றன. இப்புதிய விதிகளை அடிப்படையாகக்கொண்டே, கடந்தாண்டு 24 அர்ச்சகர்களைப் பல்வேறு கோயில்களில் நியமனம் செய்தது திமுக அரசு.
இந்நிலையில், அத்தகைய நியமனத்தை எதிர்த்து அகில இந்திய ஆதி சிவாச்சாரியார்கள் சேவா சங்கம் உள்ளிட்டப் பல தரப்பின் சார்பில் தொடுக்கப்பட்ட வழக்கில் அர்ச்சகர் உள்ளிட்ட கோவில் ஊழியர்களை நியமிக்கும் அதிகாரம், அறங்காவலர் அல்லது தக்காருக்கு மட்டுமே உள்ளது; ஆகம விதிகளைப் பின்பற்றும் கோவில்களுக்கு, அர்ச்சகர் நியமன விதிகள் பொருந்தாது' என அதற்கு நேர் எதிராக தீர்ப்பை அளித்திருக்கிறது சென்னை உயர் நீதிமன்றம்.
ஆகம விதியைக்கொண்டு தமிழகக் கோயில்களைப் பிரித்தறிய முற்படுவது என்பது அர்ச்சகராவதற்கு குறிப்பிட்ட சாதி மட்டுமே தகுதியானது என்ற மனுதர்மத்தையே நிலைநிறுத்தும். இப்பொழுது நியமிக்கப்பட்டிருக்கும் ஐவர் குழு தமிழகக்கோயில்கள் யாவற்றையும் ஆகமத்தைக்கொண்டதெனக் கூறினால், அது அனைத்துச்சாதியினரும் அர்ச்சகர் எனும் நெடுநாளைய போராட்டத்தை முற்றாகச் சிதைத்துவிடும். தமிழக அரசு நியமித்தது போகத் தமிழகத்தின் பல கோயில்களில் பல சமூகத்தினர் அர்ச்சகர்களாக, கோயில் திருப்பணிகளை மேற்கொள்பவர்களாக காலங்காலமாக இருந்துவருகின்றனர். இத்தீர்ப்பு அவர்களின் பண்பாட்டு உரிமையையும் சேர்த்து பறித்துவிடும். சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்த வேண்டிய நீதிமன்றம், ஆகமமெனும் பெயரில் பிறப்பின் வழியிலான பாகுபாட்டையும், ஒரு பிரிவினரின் ஆதிக்கத்தையும் அனுமதிப்பது சமூகநீதிக்கு முற்றிலும் எதிரானது.
ஆகவே, இவ்விவகாரத்தில், ஆகம விதிகளின்படி கோயில்களை வகைப்படுத்தக்கோரி ஐவர் குழு அமைக்க உத்தரவிட்டுள்ள உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டுமெனவும், ஆகமத்தின் பெயரால் வாய்ப்புகள் மறுக்கப்படாதிருக்கும் வகையில், தகுதியும், பயிற்சியும் கொண்ட அனைத்துச்சாதியினரும் அர்ச்சகராகும் வகையில் சிறப்புச்சட்டமொன்றை இயற்ற வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாகத் தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.