கடலூர் மாவட்டம் சி.முட்லூர் ஊரின் மையப்பகுதியில் மேம்பாலம் அமைக்க தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் - சீமான்
|கடலூர் மாவட்டம் சி.முட்லூர் மக்களின் கோரிக்கையை ஏற்று ஊரின் மையப்பகுதியில் மேம்பாலம் அமைக்க தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.
சென்னை,
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:-
விழுப்புரத்திலிருந்து கடலூர் வழியாக நாகப்பட்டினம் வரை ஏறத்தாழ 164 கிராமங்கள் வழியாக அமைக்கப்பட்டு வரும் நான்கு வழிச்சாலையின் குறுக்கே கடலூர் மாவட்டம் சி.முட்லூர் பகுதியில் அமைக்கப்படும் மேம்பாலத்தை ஊரின் மையப்பகுதியில் அமைக்க வேண்டும் என்ற அவ்வூர் மக்களின் கோரிக்கை மிக மிக நியாயமானது.
மேம்பாலம் அமைக்கத் தற்போது அரசு தேர்வு செய்துள்ள வட்டார போக்குவரத்துக் கழகத்திற்கு அருகே உள்ள இடமானது ஊர் எல்லைக்கு வெளியே உள்ளதால் அங்கே மேம்பாலம் அமைப்பதால் பொதுமக்களுக்கு எவ்வித பயனும் ஏற்படப்போவதில்லை.
மேலும், சி.முட்லூர் மக்கள் கோரிக்கை விடுக்கும் பகுதியில் மேம்பாலம் அமைத்தால் பொதுமக்கள் மட்டுமின்றி கால்நடைகளும் சாலை கடக்க பெரிதும் பயன்படும். எனவே, மக்கள் கோரும் ஊரின் மையப்பகுதியில் மேம்பாலம் அமைக்க தமிழ்நாடு அரசு முன்வர வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.
இக்கோரிக்கையை வலியுறுத்திப் போராடும் சி.முட்லூர் உள்ளிட்ட சுற்றுவட்டார 5 கிராம மக்கள் முன்னெடுக்கும் போராட்டங்களை நாம் தமிழர் கட்சி முழுமையாக ஆதரிப்பதோடு, போராடும் மக்களுக்கு ஆதரவாக நியாயமான கோரிக்கையை வென்றெடுக்க நாம் தமிழர் கட்சி துணைநிற்கும் என்றும் உறுதியளிக்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.