வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க மாற்று இடத்தை தமிழக அரசு தேர்வு செய்ய வேண்டும் - டிடிவி தினகரன்
|வடலூர் பெருவெளியில் வள்ளலார் சர்வதேச மையத்தை அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்.
சென்னை,
அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் வலைதளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது,
கடலூர் மாவட்டம் வடலூர் வள்ளலார் சத்திய ஞானசபை பெருவெளி தைப்பூச நாளன்று பக்தர்கள் கூடுவதற்கான பொதுவெளியாகவே தொடர வேண்டும். வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க மாற்று இடத்தை தமிழக அரசு தேர்வு செய்ய வேண்டும்.
சாதி, மதம், இனம் வேறுபாடுகளின்றி அனைத்து உயிர்களையும் தன் உயிரைப் போலவே பார்க்க வேண்டும் என வலியுறுத்திய வள்ளலார் அவர்கள் நிறுவிய சத்திய ஞான சபையின் பெருவெளியில் வள்ளலாரின் சர்வதேச மையத்தை அமைக்க முடிவு செய்து அதற்கான பணிகளை தமிழக அரசு தொடங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
சமரச சத்திய நெறியை வளர்க்கும் நோக்கில் 200 ஆண்டுகளுக்கு முன்பாகவே வள்ளலார் அவர்களால் ஏற்படுத்தப்பட்ட ஞான சபை பெருவெளியில் ஒவ்வொரு தைப்பூச நாளன்றும் நடைபெறும் ஜோதி வழிபாட்டில் பங்கேற்பதற்காக பல லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுகின்றனர்.
இந்த நிலையில், வள்ளலாரின் கொள்கைகளுக்கு மாறாகவும், லட்சக்கணக்கான பக்தர்களுக்கு இடையூறாகவும் வடலூர் பெருவெளியில் வள்ளலார் சர்வதேச மையத்தை அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் என பக்தர்களும் அப்பகுதி பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெருவெளியில் புதிய கட்டுமானம், விவசாயம் உள்ளிட்ட எந்த பணிகளையும் மேற்கொள்ளாமல் மக்களின் வருகைக்கும் அருட்பெருஞ்சோதி ஆண்டவரின் அருளாட்சி புரிவதற்காகவும் மட்டுமே அந்த பெருவெளி பயன்பட வேண்டும் என்பதை வள்ளலார் தனது பாடல்களிலும் ஆவணப்படுத்தியிருப்பதாக அவரின் பின்பற்றாளர்கள் கூறுகின்றனர்.
எனவே, ஆண்டாண்டு காலமாக லட்சக்கணக்கான பக்தர்கள் ஜோதி வழிபாட்டிற்காக பயன்படுத்தி வரும் வடலூர் பெருவெளியில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் பணியை கைவிடுவதோடு, மாற்று இடத்தை தேர்வு செய்து அதற்கான பணியை தொடங்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.