நகராட்சி நிர்வாக நேர்முக தேர்வு தேதியை மாற்றம் செய்ய தமிழக அரசு திட்டம்
|நகராட்சி நிர்வாக நேர்முக தேர்வு தேதியை மாற்றம் செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
சென்னை,
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் காலியாக உள்ள பொறியியல் பிரிவு பணியிடங்கள் மற்றும் துப்புரவு ஆய்வாளர் காலிப்பணியிடங்களை நிரப்ப அண்ணா பல்கலைக்கழகம் மூலம் எழுத்து தேர்வுகள் நடத்தப்பட்டது. அதன் முடிவுகள் கடந்த மாதம் (செப்டம்பர்) 20-ந் தேதி வெளியிடப்பட்டது.
அதில் தேர்ச்சி பெற்ற பட்டப்படிப்பு தகுதி நிலை பணியிடங்களுக்கு 7-ந் தேதி (நேற்று) முதல் 18-ந் தேதி வரையும், பட்டயப்படிப்பு தகுதி நிலை பணியிடங்களுக்கு வருகிற 21-ந் தேதி முதல் அடுத்த மாதம் (நவம்பர்) 14-ந் தேதி வரையும் நேர்முக தேர்வு நடத்தப்படுகிறது. அதற்கான அழைப்புக் கடிதங்களும் http://tnmaws.ucanapply.com என்ற வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில் வருகிற 21-ந் தேதியன்று அதே நாளில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த பொறியியல் பணிக்கான எழுத்துத் தேர்வு நடைபெறுவதாக தெரியவந்துள்ளது. எனவே, இந்த பிரச்சினையை தீர்க்க நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை நடத்தும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டிய நாளில், இந்த தேர்வில் கலந்து கொள்ள வேண்டிய நபர்கள் யாராவது இருந்தால் அவர்களுக்கு மாற்று நாளில் தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
எனவே நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை பதிவு எண்ணுடன் தாங்கள் கலந்து கொள்ளும் பிற எழுத்துத் தேர்வு நேர்முகத் தேர்வுக்கான அழைப்புக் கடிதங்களுடன் dmamaws2024@gmail.com என்ற இ-மெயில் முகவரியில், நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள மாற்று தேதி கோரி விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.