என்.எல்.சி. விவகாரத்தில் விவசாயிகளுக்கு, தமிழக அரசு துரோகம் செய்கிறது - அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு
|என்.எல்.சி. விவகாரத்தில் விவசாயிகளுக்கு, தமிழக அரசு துரோகம் செய்கிறது என அன்புமணி ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.
சென்னை,
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கடலூர் மாவட்டத்தில் 64,750 ஏக்கர் நிலங்களில் நிலக்கரி சுரங்கங்களை அமைப்பதற்கான குத்தகை என்.எல்.சி.க்கு வழங்கப்பட்டிருப்பதாகவும், 2036-ஆம் ஆண்டு வரை அந்த குத்தகை நீட்டிக்கப்பட்டு இருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அதுமட்டுமின்றி, மூன்றாவது சுரங்கம் அமைப்பதை கைவிட வேண்டும் என்று தமிழக அரசிடமிருந்து எந்த கோரிக்கையும் வரவில்லை என்றும் மத்திய அரசு கூறியுள்ளது. உழவர்களின் நலன் காக்கும் அரசு என்று பெருமை பேசிக்கொள்ளும் தமிழக அரசு, எந்த அளவுக்கு உழவர்களுக்கு துரோகம் செய்கிறது என்பதற்கு இவையே சான்றுகள் ஆகும்.
நாடாளுமன்ற மாநிலங்களவையில் நான் எழுப்பிய வினாக்களுக்கு மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி எழுத்து மூலம் அளித்த விடையில் இந்த விவரங்களை கூறியுள்ளார். இந்த உண்மைகளை கருத்தில் கொண்டு, மக்கள் நலனை மனதில் கொண்டு என்.எல்.சி.க்கு வழங்கப்பட்டுள்ள குத்தகை உரிமத்தை இப்போதைய அரசு ரத்து செய்திருக்க வேண்டும்.
ஆனால், அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்பதிலிருந்து கடலூர் மாவட்ட மக்கள் நலனிலும், உழவர்கள் நலனிலும் தமிழக அரசுக்கு சிறிதும் அக்கறை இல்லை என்பது ஐயமின்றி உறுதியாகியிருக்கிறது.
குத்தகை உரிமம் வழங்கப்பட்டதால் ஏற்பட்ட ஆபத்துகள் இத்துடன் நிற்கவில்லை. உரிமம் வழங்கப்பட்ட நிலங்களில் 37,256 ஏக்கர் நிலங்களில் இதுவரை சுரங்கங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. மீதமுள்ள நிலங்களில் சுமார் 12,125 ஏக்கர் பரப்பளவில் மூன்றாவது சுரங்கத்தை அமைக்க என்.எல்.சி. தீர்மானித்து உள்ளது.
இந்த நிலங்கள் கையகப்படுத்தப்பட்டால், ஒட்டுமொத்தமாக 50 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் உழவர்களிடமிருந்து பறிக்கப்பட்டிருக்கும். அதனால், சுமார் 50 ஆயிரம் குடும்பங்கள் வாழ்வாதாரங்களை இழந்திருப்பார்கள். அதுமட்டுமின்றி, சுற்றுச்சூழலுக்கும், மனித உடல்நலத்திற்கும் அளவிட முடியாத அளவுக்கு பாதிப்புகள் ஏற்பட்டிருக்கக்கூடும். இந்த பாதிப்புகள் எந்த வகையிலும் சரி செய்ய முடியாதவை.
என்.எல்.சி.யின் மூன்றாவது சுரங்கம் அமைக்கப்படவிருக்கும் 26 கிராமங்களில், 9 கிராமங்கள் காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்திற்குள் வருபவை. மீதமுள்ள கிராமங்கள் அனைத்தும் காவிரி பாசன பகுதியில் அமைந்திருப்பவை. இந்த பகுதியில் நிலக்கரி சுரங்கங்கள் அமைப்பது பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்டத்திற்கு எதிரானதாகும்.
அதனால், மூன்றாவது நிலக்கரி சுரங்கத்தை கடுமையாக எதிர்க்க வேண்டியது தமிழக அரசின் கடமை ஆகும். ஆனால், அந்த கடமையை சற்றும் உணராத தமிழக அரசு, மூன்றாவது சுரங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல், வரவேற்கிறது. காவிரி பாசன பகுதி உழவர்களுக்கு இதை விட கொடிய துரோகத்தை எவரும் செய்துவிட முடியாது.
என்.எல்.சி. ஒன்று மற்றும் இரண்டாவது சுரங்கங்களுக்கு நிலம் எடுப்பதை எதிர்த்து போராடும் போதெல்லாம், அவை ஏற்கனவே தொடங்கப்பட்ட திட்டங்களின் விரிவாக்கம் தான் என்று தமிழக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. அப்படியானால், புதிதாக தொடங்கப்படவுள்ள மூன்றாவது சுரங்கத்திற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்திருக்க வேண்டும்.
அதுதான் மக்கள் நல அரசின் அடையாளம். ஆனால், அவ்வாறு செய்யாததன் மூலம் காவிரி பாசன மாவட்டங்களிலேயே தாம் சார்ந்த தஞ்சாவூர் மாவட்டத்திற்கு ஒரு நீதி, கடலூர் மாவட்ட மக்களுக்கு ஒரு நீதி என்று முதல்-அமைச்சர் சொல்லாமல் சொல்லி இருக்கிறார்.
தமிழகத்தின் சுற்றுச்சூழலிலும், கடலூர் மாவட்டம் மக்கள் நலனிலும், தமிழக அரசுக்கு அக்கறை இருந்தால், 64,750 ஏக்கர் நிலங்களில் சுரங்கம் அமைப்பதற்காக என்.எல்.சி.க்கு தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ள குத்தகை உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்.
அத்துடன் மூன்றாவது சுரங்க திட்டத்தை ரத்து செய்யுமாறு மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். இல்லாவிட்டால் தமிழக அரசை உழவர்களின் எதிரியாகவும், என்.எல்.சி. நிறுவனத்தின் அடிமையுமாகவே தமிழக மக்கள் பார்ப்பார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.