< Back
மாநில செய்திகள்
குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்ய தமிழக அரசு நடவடிக்கை
மாநில செய்திகள்

குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்ய தமிழக அரசு நடவடிக்கை

தினத்தந்தி
|
6 Sept 2022 8:25 PM IST

குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்ய தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

சமீபத்தில் பெய்து வருகின்ற கனமழையின் காரணமாக அண்டை மாநிலங்களிலிருந்து தக்காளி வரத்து குறைந்துள்ளதால் சென்னையில் தக்காளியின் சில்லறை விற்பனை விலை ரூ.30/- வரை உயர்ந்துள்ளது.

இந்த விலையேற்றத்தால் பொதுமக்கள் பாதிக்காத வகையில் கூட்டுறவு நிறுவனங்களால் நடத்தப்படும் பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் குறைவான விலைக்கு தக்காளி விற்பனை செய்யும்பொருட்டு கிருஷ்ணகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்ட விவசாயிகளிடமிருந்து நேரடியாக தக்காளி கொள்முதல் செய்யப்பட்டு

சென்னையில் செயல்படும் திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கம் (டி.யு.சி.எஸ்.). சிந்தாமணி நாம்கோ மற்றும் காஞ்சி மக்கள் அங்காடி முதலிய கூட்டுறவு பண்டகசாலைகளால் நடத்தப்படும் பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் குறைவான விலைக்கு விற்பனை செய்ய தமிழ்நாடு அரசின் கூட்டுறவுத்துறையால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி சென்னையில் கூட்டுறவு நிறுவனங்களால் நடத்தப்படும் பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகளில் தக்காளி தற்போது ரூ.40 முதல் 42 வரை விற்பனை செய்யப்படுகிறது. பொது மக்கள் இதை வாங்கி பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்