தமிழ்நாடு விவசாயிகள் மற்ற மாநில விவசாயிகளை விட புத்திசாலிகள்- கவர்னர் ஆர்.என்.ரவி
|விவசாயம்தான் நிலையான வாழ்க்கை முறை என்றும் மற்ற துறைகளை காட்டிலும் சிறந்த துறை விவசாயம்தான் என்று கவர்னர் ஆர்.என்.ரவி பேசினார்.
சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவன் மாளிகையில், 'கவர்னரின் எண்ணித் துணிக' நிகழ்ச்சியில், வேளாண் அறிவியல் தமிழ் இயக்கம் சார்பில் வேளாண்மை ஆளுமைகளுடனான கலந்துரையாடல் நிகழ்வு நடந்தது.
நிகழ்ச்சியில் கவர்னர் ஆர்.என்.ரவி பேசியதாவது:-
மீன்வளத்துறை செயல்படவில்லை
தமிழ்நாட்டில் மீன்வளம், மீன்வளத்துறை பற்றியும், அதிலுள்ள வாய்ப்புகள், வளங்கள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும். மீனவளத்துறையில் நம் மாநிலத்துக்கு அருகிலுள்ள ஆந்திரா சிறப்பாக உள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் தேவையான வளங்கள் இருந்தும், மீன்வளத்துறை முறையாக செயல்படவில்லை. இந்தியாவில் 15 சதவீதம் பேர் வேளாண்மையில் ஈடுபடுகிறார்கள். இந்தியாவில் விவசாயிகளின் வருமானம், வாழ்க்கைத்தரம் மேலும் வளப்படவேண்டும். உணவை உற்பத்தி செய்பவன் ஏழையாக இருப்பது கொடுமை. எனவே விவசாயத்தை எவ்வாறு மேம்படுத்த வேண்டும் என்பதில் நாம் கவனம் செலுத்தி வருகிறோம்.
புத்திசாலிகள்
நம்முடைய விவசாயிகளால்தான், நாம் உணவுக்காக மற்றவர்களிடம் கை ஏந்தும் நிலைக்கு தள்ளப்படாமல் இருக்கிறோம். ஆனால் இன்றோ விவசாயியின் மகன் விவசாயம் செய்ய விரும்புவதில்லை. விவசாயத் தொழிலில் இருக்கும் பெற்றோர்கூட தன் மகனை இந்த தொழிலை செய்யவிடாமல், வேறு தொழிலை செய்ய அனுப்பிவிடுகிறார்கள். இதுதான் இன்றைய நிலை.
தமிழ்நாட்டின் விவசாயிகள் மற்ற மாநிலங்களின் விவசாயிகளைவிட புத்திசாலிகளாக உள்ளனர். விவசாயம் பற்றிய இவர்களுடைய புரிதல், நாடு முழுவதற்கும் கொண்டுசெல்லப்படவேண்டும். தமிழ்நாட்டின் விவசாய தொழில்நுட்பத்தை மற்றவர்களும் அறியவேண்டும். இப்போது இருக்கும் டிஜிட்டல் தொழில்நுட்ப உலகத்தில் இது மிக சாதாரணமான ஒன்றுதான்.
இவ்வாறு அவர் பேசினார்.