திமுக ஆட்சியில் தமிழகத்திற்கு எந்த ஒரு நன்மையும் கிடைக்கவில்லை - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
|திமுக ஆட்சியில் தமிழகத்திற்கு எந்த ஒரு நன்மையும் கிடைக்கவில்லை என்று எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டியுள்ளார்.
கோவை,
கோவையை தமிழக அரசு புறக்கணிப்பதாக குற்றஞ்சாட்டி முன்னாள் அமைச்சர் வேலுமணி சார்பில் அதிமுகவினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தில் அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-
10 ஆண்டு கால அதிமுக ஆட்சி தமிழகத்தின் பொற்கால ஆட்சியாக இருந்தது. விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையான அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை செயல்படுத்தியது அதிமுக அரசு. கோவைக்கு மட்டும் அதிமுக ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. கோவைக்கு மட்டும் 28 தடுப்பணைகள் அதிமுக ஆட்சியில் கட்டுக்கொடுக்கப்பட்டுள்ளன.
மக்கள் நலன் கருதி அதிமுக அரசு கொண்டு வந்த திட்டங்களுக்கு திமுக அரசு ரிப்பன் வெட்டி உரிமை கொண்டாடுகிறது. அதிமுக கொண்ட வந்த கோவை மெட்ரோ ரெயில் திட்டத்தை திமுக அரசு கிடப்பில் போட்டது. திமுக ஆட்சியில் கோவைக்கு மட்டுமில்லை தமிழகத்திற்கு எந்த ஒரு நன்மையும் கிடைக்கவில்லை. 18 மாத திமுக ஆட்சியில் தமிழக மக்கள் வேதனையில் உள்ளனர்.
அதிமுக கொண்டு வந்த திட்டங்களை எல்லாம் ஒவ்வொன்றாக திமுக அரசு கைவிடுகிறது. ஒரு அரசு எப்படி செயல்படக் கூடாது என்பதற்கு திமுக அரசின் 18 மாத கால ஆட்சி சான்று.
இவ்வாறு கூறினார்.