< Back
மாநில செய்திகள்
திருவள்ளூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு நாள் விழா நிகழ்ச்சி - கலெக்டர் தொடங்கி வைத்தார்
திருவள்ளூர்
மாநில செய்திகள்

திருவள்ளூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு நாள் விழா நிகழ்ச்சி - கலெக்டர் தொடங்கி வைத்தார்

தினத்தந்தி
|
19 July 2023 3:30 PM IST

திருவள்ளூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு நாள் விழா நிகழ்ச்சியை கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தொடங்கி வைத்தார்.

தனித்துவ தமிழ்நாடு என பெயர் சூட்டப்பட்ட 18.7.1967-ம் நாளை பெருமைப்படுத்திடும் வகையில் ஆண்டுதோறும் ஜூலை 18-ந் தேதி தமிழ்நாடு நாள் என்ற பெயரில் மிக சிறப்பாக கொண்டாடப்படும் என முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

அதனை தொடர்ந்து தமிழ்நாடு நாள் விழாவை மாநிலம் முழுவதும் உள்ள பொதுமக்கள் மாணவர்கள் அறியும் வண்ணமும் மேலும் அவர்களிடம் தமிழ்நாடு நாள் உருவான வரலாறு தொடர்பான விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் வண்ணமும் தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்ட தலைநகரங்களில் தமிழ்நாடு நாள் விழா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு அறிவுறுத்தி ஆணையிடப்பட்டுள்ளது.

அதன்படி பள்ளி கல்வித்துறை சார்பாக பள்ளி மாணவ-மாணவிகள் பங்கு பெற்ற தமிழ்நாடு நாள் விழா குறித்த விழிப்புணர்வு பேரணி மற்றும் விழிப்புணர்வு வாகனத்தை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர். ஆல்பி ஜான் வர்கீஸ் நேற்று காலை தொடங்கி வைத்தார். இந்த விழிப்புணர்வு வாகனம் நேற்று முதல் ஜூலை 23-ந் தேதி வரை திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் சென்று பொது மக்களிடையே தமிழ்நாடு நாள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளது.

இந்த பேரணியில் 250 பள்ளி மாணவ-மாணவி்கள் கலந்து கொண்டு தமிழ்நாடு நாள் விழா விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தி தமிழ் மொழியின் பெருமையையும் தமிழ்நாட்டின் வரலாற்று முக்கியத்துவ நிகழ்வுகளையும் உரக்க சொல்லி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

அதனை தொடர்ந்து செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பாக தமிழ்நாடு நாள் விழா கொண்டாடப்படுவதன் அவசியம் குறித்த வரலாற்று பதிவுகள் அரசின் பல்வேறு திட்டங்கள் மற்றும் சாதனைகளை விளக்கும் வகையிலான வண்ண புகைப்படங்கள் நிரம்பிய புகைப்பட கண்காட்சி அரங்கத்தை மாவட்ட கலெக்டர் தொடங்கி வைத்தார். இந்த கண்காட்சி 23-ந் தேதி வரை நாள்தோறும் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை பொதுமக்கள், மாணவ-மாணவி்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் இலவசமாக பார்வையிடுவதற்கு உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மேலும் தமிழ்நாடு நாள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாணவ-மாணவியர்களிடையே நடத்தப்பட்ட பல்வேறு இலக்கிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் காசோலைகளை கலெக்டர் வழங்கினார்.

விழாவில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சரஸ்வதி, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பாபு, மாவட்ட கல்வி அலுவலர் தேன்மொழி, தமிழ் வளர்ச்சி துறை பணியாளர்கள், ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள் மற்றும் பல் வேறு துறை சார்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்