ராணிப்பேட்டை
தமிழ்நாடு தின விழிப்புணர்வு ஊர்வலம்
|ராணிப்பேட்டையில் தமிழ்நாடு தின விழிப்புணர்வு ஊர்வலத்தை அமைச்சர் ஆர்.காந்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
ராணிப்பேட்டையில் தமிழ்நாடு தின விழிப்புணர்வு ஊர்வலத்தை அமைச்சர் ஆர்.காந்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
விழிப்புணர்வு ஊர்வலம்
தமிழ்நாடு தினத்தை முன்னிட்டு ராணிப்பேட்டை காரை கூட்ரோட்டில்இன்று விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார். கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கொடியசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.
ஊர்வலம் காரை கூட்ரோட்டில் தொடங்கி கலெக்டர் அலுவலகத்தில் நிறைவடைந்தது. இதில் பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
புகைப்பட கண்காட்சி
அதைத்தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு நாள் உருவான வரலாறு தொடர்பான புகைப்பட கண்காட்சியினை அமைச்சர் ஆர்.காந்தி திறந்து வைத்து பார்வையிட்டார்.
இந்த புகைப்பட கண்காட்சி வருகிற 23-ந் தேதி வரை காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறும். எனவே பொதுமக்கள் மாணவ-மாணவிகள் வந்து பார்வையிட்டு செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சான்றிதழ்
இதனை தொடர்ந்து தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தமிழ்நாடு நாள் விழாவை கொண்டாடும் விதமாக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான கட்டுரை, கவிதை, பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற 24 மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகையினை அமைச்சர் ஆர்.காந்தி வழங்கி பேசினார்.
நிகழ்ச்சியில் ஜெ.எல்.ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ., ராணிப்பேட்டை நகரமன்ற தலைவர் சுஜாதா வினோத், துணைத்தலைவர் ரமேஷ்கர்ணா, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அசோக், தமிழ் வளர்ச்சி துறை கண்காணிப்பாளர் சாந்தி உள்பட பலர் கலந்துகொண்டனர்.