< Back
மாநில செய்திகள்
திராவிட மாடல் ஆட்சிக்கு மக்கள் கொடுத்துள்ள மகத்தான அங்கீகாரம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
மாநில செய்திகள்

திராவிட மாடல் ஆட்சிக்கு மக்கள் கொடுத்துள்ள மகத்தான அங்கீகாரம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

தினத்தந்தி
|
3 March 2023 5:46 AM IST

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வெற்றி திராவிட மாடல் ஆட்சிக்கு மக்கள் கொடுத்துள்ள அங்கீகாரம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

மகத்தான வெற்றி

ஈரோடு சட்டமன்ற கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மாபெரும் வெற்றி பெற்றது குறித்து, தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மகத்தான வெற்றியை பெற்றிருக்கிறார். இந்த மாபெரும் வெற்றியை வழங்கிய ஈரோடு கிழக்கு தொகுதியின் வாக்காள பெருமக்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த வெற்றியானது மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு கிடைத்த மகத்தான வெற்றி.

தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் திராவிட மாடல் ஆட்சிக்கு மக்கள் கொடுத்துள்ள மகத்தான அங்கீகாரம். 'இது இடைத்தேர்தல் மட்டுமல்ல, எடைத்தேர்தல்' என்று தேர்தல் பிரசாரத்தின்போது நான் குறிப்பிட்டேன். தி.மு.க.வின் இரண்டாண்டுகால ஆட்சியானது, மக்களின் நம்பிக்கையை பூர்த்தி செய்து, தமிழ்நாட்டை அனைத்து துறைகளிலும் முன்னேற்றி வருவதற்கு மக்கள் தங்களது நன்றியை வாக்குகளின் மூலமாக உயர்த்தி காட்டி இருக்கிறார்கள்.

இயலாமை

தன்னை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளரை விட 66 ஆயிரம் வாக்கு களுக்கும் மேலான வித்தியாசத்தில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வெற்றி பெற்றிருக்கிறார். எதிர்த்து போட்டியிட்ட பலரும் வைப்புத்தொகையை இழந்திருக்கிறார்கள். இது சாதாரண வெற்றியல்ல, மகத்தான வெற்றி. இந்த இடைத்தேர்தல் களத்தை தனது இழிவான அரசியலுக்கு பயன்படுத்தியது அ.தி.மு.க. முன்னாள் முதல்-அமைச்சர், இந்நாள் எதிர்க்கட்சி தலைவர் என்ற தகுதியை மறந்து, தன்னிலை இழந்து மிக மோசமான சொற்களை பயன்படுத்தி அ.தி.மு.க. வேட்பாளருக்கு பிரசாரம் செய்தார் எடப்பாடி பழனிசாமி.

வேட்டி இருக்கிறதா-மீசை இருக்கிறதா-ஆண்மை இருக்கிறதா என்றெல்லாம் நாலாம்தர, ஐந்தாம்தர அ.தி.மு.க. பேச்சாளரை போல அவர் பேசினார். தோல்வி பயத்தில் அவர் பிதற்றி வந்ததையே அது காட்டியது. சொந்த கட்சிக்குள் நடக்கும் நாற்காலி சண்டைகளை சமாளிக்க முடியாமல், அந்த இயலாமையை ஈரோடு கிழக்கு தொகுதி மக்களிடம் வந்து காட்டிக்கொண்டிருந்தார் எடப்பாடி பழனிசாமி.

பாராட்டு சான்றிதழ்

நான்காண்டுகாலம் தனது கையில் பதவி இருந்தபோது மக்களுக்காக துரும்பை கூட கிள்ளிப்போடாத எடப்பாடி பழனிசாமி, அதனை எல்லாம் மக்கள் மறந்திருப்பார்கள் என்று நினைத்து வாய்நீளம் காட்டினார். பதவியேற்ற நாள் முதல் தினந்தோறும் திட்டங்களை தீட்டிக்கொண்டிருக்கும் எங்களைப் பார்த்து, 'எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை' என்றார். பூனை கண்ணை மூடிக்கொண்டு, உலகம் இருண்டுவிட்டது என்று நினைப்பதைப் போல எடப்பாடி பழனிசாமி நினைத்தார். அவரது ஆட்சிக்காலம் இருண்டகாலம் என்பதை மீண்டும் ஒரு முறை அவருக்கு ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள் உணர்த்தி இருக்கிறார்கள்.

கடந்த சட்டமன்றத்தேர்தலில் தி.மு.க.வின் மீது நம்பிக்கை வைத்து மக்கள் வாக்களித்தார்கள். வாக்களித்த மக்களுக்கு உண்மையாக இருந்து செயல்பட்டுள்ளோம் என்பதற்கு மக்கள் இந்த இடைத்தேர்தல் வெற்றி மூலமாக பாராட்டு சான்றிதழ் கொடுத்துள்ளார்கள். அந்த மக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். உங்கள் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், மிகச்சிறப்பாகச் செயல்பட்டு உங்களது கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றி தருவார்.

வெற்றி பயணத்தை தொடருவோம்

இந்த வெற்றிக்காக அயராது பாடுபட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியின் தலைவர்கள், அமைச்சர்கள், கட்சி முன்னணியினர், மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள், உடன்பிறப்புகள் அனைவருக்கும் இருகரம் கூப்பி நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இது ஈரோடு கிழக்கு தொகுதியின் வெற்றி மட்டுமல்ல, இந்த ஆட்சியின் வெற்றி. கட்சியின் வெற்றி. இந்த வெற்றிப் பயணத்தைத் தொடருவோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்