< Back
மாநில செய்திகள்
கிருஷ்ணா நதிநீர் திறப்பை ஜூலை 1-ந்தேதி முதல் நிறுத்த தமிழக அதிகாரிகள் கோரிக்கை
மாநில செய்திகள்

கிருஷ்ணா நதிநீர் திறப்பை ஜூலை 1-ந்தேதி முதல் நிறுத்த தமிழக அதிகாரிகள் கோரிக்கை

தினத்தந்தி
|
28 Jun 2022 11:57 PM IST

செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளில் போதுமான நீர் இருப்பதால் கூடுதல் தண்ணீரை சேமிக்க முடியாத நிலை உள்ளது.

திருவள்ளூர்,

கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திரா அரசு வருடந்தோறும் 12 டி.எம்.சி. தண்ணீரை தமிழகத்துக்கு வழங்க வேண்டும். ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி. மற்றும் ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி. தண்ணீரை நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு திறந்துவிட வேண்டும்.

அந்த வகையில், தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று ஆந்திர அரசு கடந்த மாதம் 5-ந்தேதி கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்தது. இந்த தண்ணீர் கடந்த மாதம் 8-ந்தேதி தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாமரைகுப்பம் ஜீரோ பாயிண்டுக்கு வந்தடைந்தது. அன்றிரவே பூண்டி ஏரிக்கு சென்றடைந்தது. தற்போதைய நிலவரப்படி பூண்டி ஏரிக்கு 550 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

சென்னை குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு பூண்டி ஏரிக்கு வரும் கிருஷ்ணா தண்ணீர் முழுவதும் செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளுக்கு அனுப்பப்பட்டு வந்தது. இதனால் இந்த 2 ஏரிகளிலும் நீர் இருப்பு அதிகரித்து, 90 சதவீதத்துக்கும் மேல் தண்ணீர் உள்ளது.

இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த பலத்த மழை காரணமாக செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதைத்தொடர்ந்து பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளுக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. மேலும் செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளில் போதுமான நீர் இருப்பதால் கூடுதல் தண்ணீரை சேமிக்க முடியாத நிலை உள்ளது.

இதைத்தொடர்ந்து கண்டலேறு அணையில் இருந்து வரும் கிருஷ்ணா நதிநீர் முழுவதும் தற்போது பூண்டி ஏரியிலேயே சேமிக்கப்பட்டு வருகிறது. பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3,231 மி.கனஅடி ஆகும். இதில் தற்போது 1,383 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. எனினும் பூண்டி ஏரியில் கூடுதல் தண்ணீரை சேமிக்க அதிகாரிகள் விரும்பவில்லை.

மேலும் ஏரியில் உள்ள நீர் திறப்பு மதகுகளை சீரமைத்து தண்ணீர் சேமிப்பை அதிகரிக்க அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர். இதையடுத்து கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா தண்ணீர் திறப்பை வருகிற 1-ந்தேதி முதல் நிறுத்த தமிழக நீர்வளத்துறை அதிகாரிகள் ஆந்திர அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.

மேலும் செய்திகள்