'தமிழ்நாட்டிற்கும், சவுராஷ்டிராவுக்கும் தொடர்புகள் உள்ளது'- கவர்னர் ஆர்.என்.ரவி
|தமிழ்நாட்டில் உள்ள சவுராஷ்டிர மக்கள் தங்கள் வேர்களை தேடிச் செல்ல வேண்டும் என கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.
சென்னை,
தமிழ்நாடு மற்றும் சவுராஷ்டிரா இடையேயான தொடர்பை எடுத்துரைக்கும் வகையில் வரும் 17-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை குஜராத் மாநிலத்தில் சவுராஷ்டிரா தமிழ் சங்கமம் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சிக்காக மதுரையில் இருந்து குஜராத்தில் உள்ள விராவல் நகருக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
இந்த ரெயிலை சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட முக்கிய பா.ஜ.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
சிறப்பு ரெயிலை தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.என்.ரவி, தமிழ்நாட்டிற்கும், சவுராஷ்டிராவுக்கும் தொடர்புகள் உள்ளது என தெரிவித்தார். தமிழகத்தில் சில ஆயிரம் சவுராஷ்டிர மக்கள் வாழ்கிறார்கள் எனவும், இது நாம் ஒருவரை ஒருவர் தெரிந்து கொள்ளும் காலம் என்றும் கூறினார்.
மேலும் இதற்காகவே சவுராஷ்டிரா தமிழ் சங்கமம் தொடங்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்ட கவர்னர் ஆர்.என்.ரவி, தமிழ்நாட்டில் உள்ள சவுராஷ்டிர மக்கள் தங்கள் வேர்களை தேடிச் செல்ல வேண்டும் எனவும், நமது பாரம்பரியத்தை நாம் தெரிந்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.