தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2024-25... மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம் அறிமுகம்
|வேம்பினை பரவலாக்கம் செய்திடும் வகையில் 10 லட்சம் வேப்ப மரக்கன்றுகள், வேளாண் காடுகள் திட்டத்தில் இலவசமாக விநியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
தமிழக சட்டப்பேரவையில் 2024-2025ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். அப்போது வேளாண் துறையில் அரசின் சாதனைகளை பட்டியலிட்ட அவர், புதிய திட்டங்களையும் நிதி ஒதுக்கீடுகளையும் அறிவித்தார். அமைச்சர் பேசியதாவது:-
மண்வளத்தை பேணிக்காக்கவும், மக்கள் நலன் காக்கும் விதமான உயிர்ம வேளாண்மை போன்ற அனைத்து வேளாண் செய்முறைகளையும் ஊக்கப்படுத்தவும், 'முதல்-அமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம்' என்ற புதிய திட்டம் 22 இனங்களுடன் செயல்படுத்தப்படும்.
இதில், பசுந்தாள் உர உபயோகத்தினை ஊக்குவித்து மண்வளம் காக்கும் வகையில், ஆயக்கட்டு இறவைப் பாசன பகுதிகளில் முதற்கட்டமாக 2024-25ம் ஆண்டில் 2 லட்சம் ஏக்கரில் பசுந்தாள் உரம் பயிரிட 20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இதனால் தமிழ்நாட்டில் உள்ள 2 லட்சம் விவசாயிகள் பயனடைவர்.
ரசாயன உரங்களின் பயன்பாட்டினைக் குறைத்து மண்ணின் வளம் காக்க 6 கோடியே 27 லட்சம் ரூபாய் மத்திய-மாநில அரசு நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
37,500 ஏக்கர் களர் நிலங்களை சீர்படுத்த 7 கோடியே 50 லட்சம் ரூபாயும், 37,000 ஏக்கர் அமிர நிலங்களை சீர்படுத்த 15 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்படும்.
2 லட்சம் விவசாயிகளுக்கு 10 லட்சம் ஏக்கரில் பயிர் இடுவதற்காக 5 லட்சம் லிட்டர் உயிர் உரங்கள், 7 கோடியே 50 லட்சம் ரூபாய் ஒதுக்கீட்டில் வழங்கப்படும்.
வேம்பினை பரவலாக்கம் செய்திடும் வகையில் 10 லட்சம் வேப்ப மரக்கன்றுகள் வேளாண் காடுகள் திட்டத்தில் இலவசமாக விநியோகிக்கப்படும். இதற்கென 2 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.
14,000 ஒருங்கிணைந்த பண்ணைய தொகுப்புகள் அமைத்திட ரூ.42 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
தமிழ்நாட்டில் காலநிலை மாற்றத்தினால் பாதிக்கப்படாத சிறப்பு வேளாண் கிராமங்களை உருவாக்க மற்றும் பரவலாக்க ரூ.1.48 கோடி நிதி ஒதுக்கீடு.
725 உயிர்ம வேளாண் தொகுப்புகளுக்கு ரூ.27 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
உயிர்ம வேளாண்மை மாதிரிப் பண்ணை உருவாக்க ரூ.38 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
2024-25ம் ஆண்டு முதல் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம் செயல்படுத்தப்படும். 2024-25ம் ஆண்டுக்கு மொத்தம் 206 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.
இவ்வாறு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசினார்.