< Back
மாநில செய்திகள்
தமிழக மீனவர்களை உடனடியாக மீட்க வேண்டும் - மத்திய அரசுக்கு திருமாவளவன் வலியுறுத்தல்
மாநில செய்திகள்

'தமிழக மீனவர்களை உடனடியாக மீட்க வேண்டும்' - மத்திய அரசுக்கு திருமாவளவன் வலியுறுத்தல்

தினத்தந்தி
|
2 July 2024 9:50 PM IST

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை மத்திய அரசு உடனடியாக மீட்க வேண்டும் என திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி. வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

"ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 25 மீனவர்கள் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையால் அத்துமீறி கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களது நான்கு படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கடந்த மாதம் 18-ந்தேதி புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 4 மீனவர்களும், 22-ந்தேதி 22 தமிழ்நாட்டு மீனவர்களும் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.

அவர்களை விடுதலை செய்வதற்கும் அவர்களது படகுகளை மீட்பதற்கும் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதுபோன்ற பிரச்சினைகளை தீர்ப்பதற்காக இந்திய-இலங்கை அரசுகள் கூட்டாக அமைத்த "கூட்டு நடவடிக்கை குழு" கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்திய அரசின் வெளியுறவுத்துறை மந்திரிக்கு கடிதம் எழுதியிருந்தார். ஆனால், மத்திய அரசு தமிழ்நாட்டு மீனவர்களை இந்திய மீனவர்களாகவே கருதுவதில்லை.

இலங்கை கடற்படையின் அத்துமீறல்களுக்கு மவுனமாக அங்கீகரம் அளிப்பதுபோல நடந்துகொள்வதை வாடிக்கையாக கொண்டுள்ளது. முதல்-அமைச்சரின் வேண்டுகோளுக்கு மத்திய அரசு செவிசாய்த்திருந்தால் மீண்டும் கைது நடவடிக்கையில் இலங்கை கடற்படை ஈடுபட்டிருக்காது.

கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் நாட்டு படகுகளில் மீன் பிடிப்பவர்கள். இதற்கு முன்னர் நாட்டு படகுகளில் மீன் பிடிப்பவர்களை இலங்கை கடற்படை கைது செய்ததில்லை என கூறப்படுகிறது. இதை இந்திய வெளியுறவுத்துறை மந்திரி கவனத்தில் கொள்ள வேண்டும். இனியும் தாமதிக்காமல் உடனடியாக தமிழ்நாடு மீனவர்களை மீட்பதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்."

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்