விருதுநகர்
தமிழ் தேர்வு எளிதாக இருந்தது
|பிளஸ்-1 தமிழ் தேர்வு எளிதாக இருந்ததாக மாணவ-மாணவிகள் மகிழ்ச்சியுடன் கூறினர்.
ஆலங்குளம்,
பிளஸ்-1 தமிழ் தேர்வு எளிதாக இருந்ததாக மாணவ-மாணவிகள் மகிழ்ச்சியுடன் கூறினர்.
பிளஸ்-1 தேர்வு
விருதுநகர் மாவட்டத்தில் நேற்று பிளஸ்-1 தமிழ் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வு குறித்து மாணவ-மாணவிகள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு:-
ஆலங்குளத்தை சேர்ந்த சதீஷ்குமார்:- நாங்கள் ஆரம்பம் முதல் தொடர்ந்து பள்ளிக்கு சென்று படித்து வந்ததால் தேர்வினை மிகவும் எளிதான முறையில் எழுத முடிந்தது. நாங்கள் திருப்புதல் தேர்வு உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளில் எழுதிய வினாக்களில் இருந்து தான் பெரும்பாலான கேள்விகள் வந்தன.
ஆதலால் தமிழ் தேர்வில் அதிக மதிப்பெண்கள் நிச்சயமாக பெற முடியும். எங்கள் பள்ளி ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் தொடர்ந்து எங்களுக்கு ஊக்கம் அளித்து வந்தனர்.
நல்ல மதிப்பெண்
ராஜபாளையத்தை சேர்ந்த பிருந்தா:- தமிழ் வினாத்தாள் மிகவும் எளிமையாக இருந்தது. ஏற்கனவே பள்ளியில் நடைபெற்ற தேர்வுகளில் கேட்கப்பட்ட வினாக்கள் தான் அதிக அளவில் கேட்கப்பட்டு இருந்தன.
ஒரு மதிப்பெண், மனப்பாடப்பாடல், நெடுவினாக்கள் நாங்கள் பலமுறை எழுதிப்பயிற்சி பெற்றதால் நல்ல மதிப்பெண் உறுதியாக எடுப்பேன் என நம்புகிறேன். இந்தநேரத்தில் எனது பள்ளிக்கும், தமிழக அரசுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
எளிமையாக இருந்தது
அருப்புக்கோட்டையை சேர்ந்த தினேஷ் சபரி:- நான் எதிர்பார்த்த கேள்விகள் அனைத்தும் வந்தன. ஆதலால் அதிக மதிப்பெண்கள் கண்டிப்பாக பெறுவேன். தேர்வு மிகவும் எளிதாக இருந்தது. வருகிற தேர்வும் எளிமையாக இருக்கும் என நம்புகிறேன். எனவே திட்டமிட்டபடி வெற்றிகரமாக தேர்வு எழுதி அதிக மதிப்பெண்கள் பெறுவேன். இவ்வாறு அவர்கள் கூறினர்.