தமிழ் வளர்ச்சிக்காக தமிழ் பரப்புரை கழகம்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்
|இந்தி மொழியை வளர்க்க இந்தி பிரசார சபா இருப்பது போல், தமிழ் வளர்ச்சிக்காக தமிழ் பரப்புரை கழகத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்.
சென்னை:
இந்தியாவின் தேசிய மொழியான இந்தியை நாடு முழுவதும் வளர்க்க இந்தி பிரசார சபா என்ற அமைப்பு சுதந்திரத்துக்கு முன்பே இயங்கி வருகிறது. செம்மொழியான தமிழையும் நாடு முழுவதும் வளர்க்கும் நோக்கத்தில், தமிழ்ப் பரப்புரைக் கழகம் என்ற அமைப்பை தமிழக அரசு தொடங்க இருக்கிறது.
இதற்கான விழா, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள விவேகானந்தா அரங்கத்தில் நாளை (சனிக்கிழமை) மாலை 6.30 மணிக்கு நடைபெறுகிறது. விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, தமிழ்ப் பரப்புரைக் கழகத்தை தொடங்கி வைப்பதுடன், இந்த திட்டத்தின் கீழ் தமிழ் கற்றல், கற்பித்தலுக்கான பாடப்புத்தகங்கள், கற்றல் மேலாண்மை செயலி மற்றும் துணைக் கருவிகளையும் வெளியிட்டு பேசுகிறார்.
விழாவுக்கு மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் எண்ம சேவைகள் துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
விழாவில், தமிழ் இணையக் கல்விக் கழக இயக்குநர் (பொறுப்பு) வீ.ப.ஜெயசீலன், தமிழ் இணையக் கல்விக் கழக தலைவர் த.உதயச்சந்திரன், தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் எண்ம சேவைகள் துறை முதன்மை செயலாளர் நீரஜ் மித்தல் மற்றும் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொள்கின்றனர்.
மேலும், பல்வேறு வெளிநாடுகள் மற்றும் பிற மாநிலங்களில் உள்ள தமிழ் அமைப்புகள், தமிழ் சங்கங்கள் மற்றும் மாணவர்கள் இணைய வழியில் கலந்துகொள்கிறார்கள்.