திருவள்ளூர்
தாம்பரம் மாநகராட்சி ஆதி திராவிடர் நடுநிலைப்பள்ளி சீரமைப்புக்கு ரூ.50 லட்சம் - டி.ஆர்.பாலு எம்.பி. வழங்கினார்
|தாம்பரம் மாநகராட்சி ஆதி திராவிடர் நடுநிலைப்பள்ளி சீரமைப்பு பணிக்கு டி.ஆர்.பாலு எம்.பி. தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து முதல் கட்டமாக ரூ.50 லட்சம் வழங்கினார்.
சென்னையை அடுத்த தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட கடப்பேரி பகுதியில் ஆதிதிராவிடர் நல நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் கடப்பேரி, புலிகொரடு, பழைய தாம்பரம், ரங்கநாதபுரம் பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர். தற்போது இந்த பள்ளி பராமரிப்பு இல்லாமல் உள்ளதால் அந்த பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு மேல் சென்று அரசு பள்ளிகளில் படிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இந்த பள்ளியை சீரமைக்கவும், புதிய கட்டிடம் கட்டித்தரவும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்த கோரிக்கையை ஏற்று ஆதிதிராவிடர் நல நடுநிலைப் பள்ளியின் சீரமைப்பு மற்றும் புதிய கட்டிடம் கட்டுவதற்கு ஸ்ரீபெரும்புதூர் எம்.பி. டி.ஆர்.பாலு தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து முதல் கட்டமாக ரூ.50 லட்சத்தை ஒதுக்கினார். இதற்கான ஆவணங்களை தாம்பரம் எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.ராஜா மற்றும் தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி ஆகியோரிடம் டி.ஆர்.பாலு எம்.பி. வழங்கினார். அப்போது தாம்பரம் மாநகராட்சி 4-வது மண்டல குழு தலைவர் டி.காமராஜ் உடன் இருந்தார்.